இடைத்தேர்தல் நடைபெற்றால் 20 தொகுதிகளிலும் தி.மு.கவினரே வெற்றி பெறுவார்கள் என்று மு.க.ஸ்டாலின் எடுத்த ரகசிய சர்வே தெரிவித்துள்ளதாக கூறி அவரது கட்சியினர் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.
இடைத்தேர்தலில் 20க்கு 20! ஸ்டாலின் எடுத்த ரகசிய சர்வே! குஷியில் தி.மு.க நிர்வாகிகள்!

தி.மு.க
தலைவராக பதவி ஏற்ற பிறகு மு.க.ஸ்டாலின் எதிர்கொண்டுள்ள முதல் அக்னிப்பரிட்சை
இடைத்தேர்தல் தான். கலைஞர் மறைவால் காலியான திருவாரூர் தொகுதியுடன் அ.தி.மு.க
எம்.எல்.ஏ மறைவால் காலியாக இருக்கும் திருப்பரங்குன்றம் மற்றும் தகுதி நீக்க
எம்.எல்.ஏக்களின் 18 தொகுதிகள் என 20 தொகுதிகளில் தமிழகத்தில் இடைத்தேர்தலை
எதிர்நோக்கி உள்ளது.
திருப்பரங்குன்றம் தவிர மற்ற 19 தொகுதிகளுக்குள் பிப்ரவரி மாத்திற்குள் தேர்தல் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் இடைத்தேர்தலை எதிர்கொள்ள தயாராவதன் முன்னோட்டமாக மும்பையை சேர்ந்த பிரபல கருத்துக்கணிப்பு நிறுவனத்தை வைத்து ரகசியமாக ஒரு சர்வே எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 20 தொகுதிகளிலும் கடந்த 10 நாட்களாக எடுக்கப்பட்ட சர்வே இன்று ஸ்டாலின் வசம் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
ஸ்டாலின் தனக்கு மிக மிக நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரிவித்துவிட்டு
எடுத்துள்ள இந்த சர்வே முடிவுகள் கிடைத்த பிறகு தான் துரைமுருகன் உள்ளிட்ட மூத்த
நிர்வாகிகளிடமே விவரத்தை கூறியுள்ளார். இந்த நிலையில் 20 தொகுதிகளிலும்
ஆளும்கட்சிக்கு எதிரான அலை தீவிரமாக வீசுகிறது என்பது தான் ஸ்டாலினுக்கு சர்வே
எடுத்த நிறுவனம் கொடுத்த நம்பிக்கையூட்டும் அம்சங்களில் மிகவும் முக்கியமானது.
மேலும் 20 தொகுதிகளிலுமே அ.தி.மு.கவில்
குழப்பம் நிலவுவது தி.மு.கவிற்கு மிகவும் சாதகமான அம்சமாக சொல்லப்பட்டுள்ளது.
தினகரன் கட்சியினர் மிகவும் ஆக்டிவாக 20 தொகுதிகளிலும் இருந்தாலும் கூட சாமான்ய
மக்களுக்கு உதயசூரியன், இரட்டை இலை சின்னத்தை தவிர பெரிதாக வேறு எந்த சின்னம்
பற்றிய அறிதல் இல்லை என்பதும் கருத்துக் கணிப்பின் சாராம்சமாகும்.
இவை அனைத்தையும் வைத்து பார்க்கும் போது
தி.மு.க 20 தொகுதிகளிலும் சரியான வேட்பாளர்களை தேர்வு செய்து தேர்தல் பணிகளை
முறையாக செய்தாலே ஒட்டு மொத்தமாக வெற்றி பெற முடியும் என்று சர்வேயில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை தனக்கு நெருக்கமான நிர்வாகிகள் மற்றும் 20
தொகுதிகள் உள்ள மாவட்டங்களின் செயலாளர்களிடம் அனுப்பி உடனடியாக பணிகளை
முடுக்கிவிடும்படி ஸ்டாலின் கூறியுள்ளாராம்.
இந்த சர்வே பற்றிய தகவல் அறிந்து தி.மு.க
உயர்மட்ட நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்து தேர்தல் பணியில் சுறுசுறுப்பு காட்ட
உள்ளார்கள் என்கிறது அறிவாலய வட்டாரம்.