பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி. 12 லட்சம் கோடி நஷ்டம், காரணம் தெரியுமா?

கடந்த 5 நாட்களில் சுமார் 3000 புள்ளிகள் வீழ்ச்சியை சந்தித்து ரூபாய் 12 லட்சம் கோடி இழப்பை சந்தித்துள்ளது இந்திய பங்குச்சந்தை.


இந்திய பங்குச்சந்தை கடந்த 2008-09 மற்றும் 2014 ஆண்டு ஏற்பட்ட நிதி நெருக்கடி காலகட்டத்தினைப் போல மீண்டுமொரு மோசமான சரிவை சந்தித்துள்ளது.

வார இறுதி வர்த்தக தினமான கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 1,450 புள்ளிகள் சரிந்து 38,297 புள்ளிகளிலும்., தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 3.71% குறைந்து 11,219 புள்ளிகளிலும் முடிவடைந்தது. மேலும் வங்கித் துறை சார்ந்த நிஃப்டி வங்கி குறியீடு 3.5% சரிந்து 29,147 புள்ளிகளில் முடிவடைந்தன.

இந்த கடுமையான வீழ்ச்சியின் காரணமாக கடந்த ஐந்து நாட்கள் வர்த்தகத்தில் மட்டும் சுமார் ₹ 12 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு இந்திய மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மூலதன இழப்பை சந்தித்துள்ளனர். மேலும் கடந்த வெள்ளிக்கிழமை ஒரே நாளில் மட்டும் சுமார் 5 லட்சத்து 20 ஆயிரம் கோடியை இழந்துள்ளனர் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள்.

கொரோனா வைரஸ் ஏற்படுத்தி உள்ள பொருளாதார தாக்குதல் காரணமாக உலகளவில் ஏற்படுத்தியுள்ள பெரும் பாதிப்பின் காரணமாக. இந்திய சந்தை கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது என்று கூறப்படுகிறது.

தேசிய பங்குச்சந்தையில் வர்த்தகமாகிவரும் வேதாந்தா நிறுவனத்தின் பங்குகள் 12.64 சதவீத வீழ்ச்சியுடன் முதலிடத்திலும், பிர்லாசாஃப்ட் ஐடி பங்குகள் 11.13 சதவீத வீழ்ச்சியுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன.

டெக் மஹிந்திரா 8.14 சதவீதம், டாடா ஸ்டீல் மற்றும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா தலா 7.50 சதவீதம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்போசிஸ், எச்.டி.எஃப்.சி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஆகிய பங்குகள் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.  

ஆர்ஐஎல் பங்குகள் 4.12 சதவீதமும், இன்போசிஸ், எச்.டி.எஃப்.சி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் பங்குகள் முறையே 4.26, 5.95, 3.67 சதவீத சரிவை சந்தித்துள்ளன.

இதே நிலை நீடித்தால் இந்திய பங்குச்சந்தையில் உள்ள மொத்த முதலீட்டாளர்கள் மூலதன இழப்பை சந்தித்து. இந்திய பொருளாதாரமே கேள்விக்குறியாகும் சூழலை உருவாக்கியுள்ளது என்று அச்சப்படுகின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

மணியன் கலியமூர்த்தி