தினகரன் கட்சியில் இருந்து வெளியேறிய பெருந்தலைகள் எல்லாம் அமைதியாக இருக்கும்போது, நான் வெளியேறியதால் அ.ம.மு.க. கலைந்துவிட்டது என்று தடாலடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார் பெங்களூரு புகழேந்தி.
தினகரனுக்கு அரசியல் தெரியாது என்பதால் அ.ம.மு.க.வை கலைச்சுட்டாராம் புகழேந்தி! கொசுத்தொல்லை தாங்க முடியலையே சாமி!

தஞ்சாவூரில் மண்டல ஆலோசனைக் கூட்டம் குத்தாலம் ஒன்றியச் செயலாளர் கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. அ.ம.மு.க.வின் அதிருப்தியாளர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் புகழேந்தி பேசியதுதான் செம.
‘‘முதல்வர் பழனிசாமி தலைமையில் சிறப்பாக ஆட்சி நடைபெற்று வருகிறது. உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு 80 சதவீத இடங்களில் வெற்றி கிடைக்கும். துணை முதல்வர் பன்னீர்செல்வம் வெளிநாட்டு பயணம் முடிவடைந்து வந்ததும், சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் அ.ம.மு.க.வின் அதிருப்தியாளர்கள் அனைவரும் அ.தி.மு.க.வில் இணைய உள்ளோம்.
தினகரனுக்கு அரசியல் தெரியாது. அவரை தலைவராக ஏற்றுக் கொண்டதற்கு வருத்தம் தெரிவிக்கிறோம். உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு தினகரனின் அரசியல் கதை முடிந்துவிடும். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க., தி.மு.க.வினர் விருப்ப மனுவை பெற்று வருகின்றனர். அரசியல் இயக்கம் நடத்துவதாக கூறும் தினகரன் விருப்ப மனு வாங்கினாரா? தனது இயக்கத்தை கட்சியாக மாற்ற அவருக்கு விருப்பமில்லை.
அ.ம.மு.க.வை ஆரம்பிக்க துணை நின்றவர்களில் நானும் ஒருவன். அந்த இயக்கத்தை விட்டு பெரும்பாலானோர் வெளியேறிவிட்டனர். எனவே, அ.ம.மு.க. இன்று முதல் கலைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நான் தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 23-ம் தேதி கடிதம் அனுப்பிவிட்டேன். இனிமேல் அமமுக பெயரை யாராவது பயன்படுத்தினால், நீதி மன்றம் மூலம் நடவடிக்கை எடுப்பேன்’’ என்று பேசினார்.
புகழேந்தி இப்படி ஏடாகூடமாகப் பேசினாலும் தினகரன் சிரித்துக்கொண்டேதான் இருக்கிறார். அது என்னதான் விஷயமோ... தாங்க முடியலையேப்பா.