போன ஜென்மத்தில் நீங்களும் நானும் கணவன் மனைவி! மந்திரவாதியை நம்பிய பெண்களுக்கு ஏற்பட்ட கதி!

பெங்களூரு: பெண்ணிடம் ரூ.40 லட்சம் மோசடி செய்த ஜோதிடரை பொதுமக்கள் அடித்து உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பெங்களூருவில் உள்ள ஸ்ரீனிவாச நகரைச் சேர்ந்தவர் வெங்கட் கிருஷ்ணாச்சார்யா. வி.கே.ஆச்சர் என்ற பெயரில் ஜோதிட தொழில் செய்து வரும் இவர், சமீபத்தில் தன்னிடம் ஜோதிடம் பார்க்க வந்த பெண்ணிடம் அமானுஷ்ய கதைகளைச் சொல்லி, முற்பிறவியில் இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தோம் என்று ஆசை வார்த்தை கூறி நம்ப வைத்துள்ளார்.

இதன்பேரில், ரூ.40 லட்சம் பணத்தை அந்த பெண்ணிடம் இருந்து வாங்கிய வெங்கட் கிருஷ்ணாச்சார்யா, பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியுள்ளார். இதன்பேரில், ஹனுமந்தநகர் பகுதியில் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவர்களைச் சேர்ந்தவர்கள் ஒன்று சேர்ந்து, வெங்கட்டை சுற்றி வளைத்து அடித்து உதைத்துள்ளனர்.

பிறகு இதுபற்றி ஹனுமந்தநகர்  போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், அவர் ஏமாற்றியது நிரூபணமானதால், போலீசார் அவரை கைது செய்தனர்.பாதிக்கப்பட்ட பெண் சார்ட்டர்ட் அக்கவுண்ட் வேலை செய்து வருகிறார்.

25 வயதாகும் அவர் தனக்கு திருமணம் ஆகவில்லை என்றும், அதற்கு ஆலோசனை சொல்லவும் கேட்டு வெங்கட்டைசந்தித்துள்ளார். அதன்பிறகே,  வெங்கட் தனது மோசடி நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.