13 வயது சிறுமி பலாத்கார வழக்கில், 3 போலீஸ் அதிகாரிகளை குற்றவாளியாக சேர்க்க, சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கற்பழிப்புக்கு ஆளான 13 வயது சிறுமிக்கு போலீசாரால் நேர்ந்த பயங்கரம்!

கடந்த 2013ம் ஆண்டு, மகாராஷ்டிரா மாநிலம், அம்போலி பகுதியில், 13 வயது சிறுமி ஒருவரை, உள்ளூர் நபர் ஒருவர் பலாத்காரம் செய்துள்ளார். இதுபற்றி அம்போலி போலீசாருக்கு தகவல் தெரியவந்துள்ளது. இதன்பேரில் விசாரணை நடத்திய அம்போலி போலீஸ் நிலைய கான்ஸ்டபிள், இன்ஸ்பெக்டர் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ஆகியோர், அந்த சிறுமியை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர், அந்த சிறுமியை கட்டாயப்படுத்தி, அவரை முதலில் பலாத்காரம் செய்த இளைஞருக்கே திருமணம் செய்து வைத்தனர். இந்த கொடுமை அனைத்தும் அந்த சிறுமியின் தந்தை கண் முன்பே நடந்தது.
இதுபற்றி, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை பல இடங்களில் முறையீடு செய்யவே, ஒருவழியாக, குற்றவாளிகள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. எனினும், இதுபற்றி விசாரணை நடத்தும்படி, அவர் மீண்டும் மும்பை உயர்நீதிமன்றத்தை நாடினார். பின்னர், இந்த வழக்கை, போக்சோ சட்டத்தின் கீழ் இயங்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு, அந்த சிறுமியின் தந்தை மாற்றியுள்ளார்.
இதன்மீதான விசாரணையின்போதுதான், அப்போது குற்றம் செய்துவிட்டு, தற்போது பதவி உயர்வு பெற்று, உயர் அதிகாரிகளாக வலம் வரும் அந்த 3 போலீசாரையும் குற்றவாளியாக சேர்த்து, வழக்கு விசாரணை நடத்தும்படி, நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு, மகாராஷ்டிரா காவல்துறையில் முக்கிய விசயமாக கவனிக்கப்படுகிறது.