சென்னையில் 800 இடங்களில் குறைந்த விலையில் தூய்மையான குடிநீர் வழங்கும் வாட்டர் ஏ.டி.எம்.களை நிறுவ சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
20 லிட்டர் வாட்டர் கேன் இனி வெறும் ரூ.7 தான்! அசர வைக்கும் புதிய திட்டம் விரைவில்!

சென்னையைப் பிடித்த சாபக் கேடாக குடிநீர் தட்டுப்பாடு தொடர்ந்து வருகிறது. இது வாட்டர் கேன் வினியோகம் செய்பவர்களுக்கு பெரும் கொண்டாட்டமாகவே உள்ளது. ஒரு வாட்டர் கேன் விலையை 35 ரூபாயில் இருந்து 40 ரூபாய் வரை தங்கள் விருப்பம் போல் நிர்ணயித்துக்கொள்வதால் பாதிக்கப்படுவது என்னவோ ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர்தான்.
இந்நிலையில் தனியாருடனான கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் 20 லிட்டர் வாட்டர் கேனை 7 ரூபாய்க்கு விற்பனை செய்ய சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அரசு இதற்காக 250 சதுர அடி நிலத்தையும், மெட்ரோ வாட்டர் மற்றும் மின்சார வசதியையும் அளிக்கும். அவற்றைக் கொண்டு தனியார்கள் ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் முறையில் தூய்மையான குடிநீராக மாற்றி மக்களுக்கு வினியோகிக்க வேண்டும். இந்த திட்டம் மூலம் சென்னை மாநகராட்சிக்கு ஒரு 20 லிட்டர் கேனுக்கு ஒரு ரூபாய் கிடைக்கும்.
இதற்காக சென்னையில் மொத்தம் உள்ள 200 வார்டுகளிலும் சுமார் 800 இடங்களில் வாட்டர் ஏ.டி.எம்.களை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் கண்காணிப்பின் கீழ் தாம்பரம், பூந்தமல்லி, செங்கல்பட்டு, உள்ளிட்ட இடங்களில் ஏற்கனவே 400 இடங்களில் வாட்டர் ஏ.டி.எம். திட்டம் கடந்த ஆண்டு செயல்படுத்தப்பட்டது.