திடீரென வீட்டுக்குள் புகுந்து பெண்மணியின் காதுகளை அறுத்துச் சென்ற மர்ம நபர்கள்! விழுப்புரம் பரபரப்பு!

விழுப்புரம்: வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் காதை அறுத்து நகை திருடிய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.


விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே உள்ள நாவல்குளம் பகுதியை சேர்ந்தவர் கல்யாணி (71 வயது). இவரது மகன் சுரேஷ் (49 வயது). சுரேஷ்க்கு மனைவி, மகன் மற்றும் மகள் உள்ளனர். சுரேஷ் புதுச்சேரியில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, சுரேஷ் வழக்கம்போல வேலைக்குச் சென்றுவிட, அவரது மனைவி அருகில் உள்ள  தையல் கடைக்குச் சென்றுவிட்டார். மகன், மகள் பள்ளிக்குச் சென்றுவிட்டு, அப்படியே மாலை டியூசன் சென்றுவிட்டனர். இரவு 8.30 மணி கடந்த பிறகும், வீட்டில் ஆள் இன்றி கல்யாணி தனியாக இருந்துள்ளார்.  

இந்த நேரத்தைப் பயன்படுத்தி மர்ம நபர்கள் 2 பேர் அவரது வீட்டிற்குள் நுழைந்து, கல்யாணியை அடித்து கீழே தள்ளி தலையணை வைத்து  அழுத்தியுள்ளனர். இதில் அவர் மூச்சுத்திணறி கீழே விழுந்தார். பிறகு, அவரது காதை அறுத்து, கம்மலை கழட்டிக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். அந்த கம்மலின் மதிப்பு ஒரு பவுன் ஆகும்.  

இரவு 9 மணியளவில் வீடு திரும்பிய சுரேஷ், அவரது மனைவி மற்றும் மகன், மகள், ரத்த வெள்ளத்தில் கல்யாணி கிடந்ததை பார்த்து  அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, அவரை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இந்த திருட்டு பற்றி ஆரோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.