பிரான்சிஸ் கிருபா கைதுக்கு உருகும் எழுத்தாளர்கள்... போலீஸ்க்கு ஆதரவாக சமூக ஆர்வலர்கள். எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா கொலை விவகாரத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் குறித்து பிரான்சிஸ் கிருபாவின் நண்பர்களும், சக எழுத்தாளர்களும் அதிர்ந்துபோய் பக்கம் பக்கமாக எழுதி வருகிறார்கள். அந்த வகையில் நெஞ்சம் உருகும் வகையில் ஒரு பதிவு போட்டிருக்கிறார் கவின் மலர். அவரது பதிவு இதோ.
பிரான்சிஸ் கிருபா வழக்கு! போலீசுக்கு சபாஷ் போடும் எழுத்தாளர்கள்!

நேற்று பகலில் ஃபிரான்சிஸ் கிருபா கைது செய்யப்பட்ட செய்தியைக் கேட்டவுடன் ஒன்றும் புரியவில்லை. மனம் நடுங்கிக்கொண்டிருந்தது. தனிமையில் வேறு இருந்து தொலைத்தேன். யார் கையையாவது பற்றிக்கொள்ளவேண்டும் போலிருந்தது. கடும் பதற்றத்தில் கைகள் நடுங்கத் தொடங்கின. அப்போது லெனின் பாரதி அழைத்தார். கண்ணீர் பொங்கி வழிந்தது. என்ன செய்யலாம் எனப் பேசினோம். கோயம்பேடு காவல் நிலையத்திற்கு சையது தோழர் சென்றிருப்பதாகவும்.ஃபிரான்சிஸிடம் அவர் பேசிவிட்டதாகவும்.முதற்கட்டத் தகவலை அளித்தார். திலகவதியிடம் பேச முடியுமா என்றார்.
உடனே திலகவதிக்கு அழைத்தேன். யாரோ அலைபேசியை எடுத்து'இரண்டு மணி நேரம் கழித்துப் பேசுங்கள். அவர் வேலையாக இருக்கிறார்' என்றார். 'மிக முக்கியமான விஷயம். சின்ன இடைவெளி கிடைத்தாலும் போதும். அவரிடம்.சொல்லுங்கள்' என்று சொல்லி வைத்தேன். சிறிது நேரத்தில் அவரே அழைத்தார். விஷயம் சொன்னவுடன் அவருக்கும் அதிர்ச்சி. நேற்று அவர் நிறைய உதவினார்.
இதற்கிடையே த.மு.எ.க.ச. தோழர் அன்பரசன் அழைத்தார். தோழர் செல்வாவிடம் பேசினார். தோழர் செல்வாவின் ஏற்பாட்டில் கோயம்பேடு தொழிலாளர்களின் சி.ஐ.டி.யூ செயலாளர் தோழர் நீலமேகமும் வேறு சில தோழர்களும் உடனடியாக காவல்நிலையத்திற்குச் சென்று நிலைமை அறிந்து தகவல் கூறினர். சம்பவம் நடந்தபோது அருகில் இருந்தோரிடமும் விசாரித்து வைத்திருந்தனர். நானும் சாம்ராஜும் கோயம்பேடு காவல்நிலையம் சென்றபோது, அங்கிருந்த எழுத்தரிடம் ஃபிரான்சிஸைப் பார்க்க அனுமதி கேட்டோம். ஒருவருக்கு மட்டுமே.அனுமதி என்று சொன்னதன் பேரில் நான் சென்று அவரை சந்தித்தேன்.
கண்ணுக்கு அருகே காயம். 'சாப்பிட்டீங்களா?' என்றேன். ஆமாம் என்றார். இரு பெண் காவலர்கள் அருகில் வந்து நின்றுகொண்டனர். 'போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்துவிடும். அதன் பின் பாசிடிவாகிவிடும்' என்றேன். 'எனக்கு வெளியே என்ன நடக்கிறதெனத் தெரியாது. மணிகூட எத்தனை எனத் தெரியவில்லை" என்றார்.
வெளியே வந்தவுடன் ஏராளமான நண்பர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அழைத்தவண்ணம் இருந்தனர். ஃபிரான்சிஸ் நடித்துவரும் திரைப்படம் ஒன்றின் இயக்குநர் சையது கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு பிணக்கூராய்வு அறிக்கை பெற்றுவரச் சென்றிருந்தார். அதிகாரிகளிடம்தான் தரமுடியும் என்று சொல்லிவிட, அவர் மீண்டும் காவல்நிலையம் வந்தார். பதினைந்து இருபது பேர் வரை அங்கே இருந்தோம்.
நடிகர் ராமச்சந்திரன் எங்களுக்கு சில தகவல்களைச் சொன்னார். இவர் சென்று அங்கிருந்த காவல்நிலைய எழுத்தரிடம் ஃபிரான்சிஸ் ஒரு கவிஞர், எழுத்தாளர் என்று சொல்ல அவர் சிரித்திருக்கிறார். ராமச்சந்திரன் அலைபேசியில் ஃபிரான்சிஸின் கவிதைகளைப் பெற்ற விருதுகள், புகைப்படங்கள் எனக் காண்பிக்க.அப்பொழுதும் பெரிதாக நம்பவில்லை போலும். ஊடகங்கள் ஒவ்வொன்றாய் வரத்துவங்கவே உண்மைதான் போலயே என்றிருக்கிறார்கள்.
கோயம்பேடு மார்க்கெட் பகுதியிலும் சென்று அங்கிருந்தோரிடமும் சொல்ல, இவரா? ரைட்டரா? என்றிருக்கின்றனர். இவ்வுலகம் டிப்டாப் உடையணிந்தால் மட்டுமே ரைட்டர் என ஒப்புக்கொள்ளும் போலும். இடையிடையே காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்து 'கவலைப்படாதீங்க. சுமூகமா முடிஞ்சிடும். சிசிடிவி ஃபுட்டேஜ் சரியா இருக்கு. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வரட்டும்' என்றபடி இருந்தனர். அலைபேசிவழி ஒவ்வொருவராக அழைத்து விசாரித்தபடி இருந்தனர் நண்பர்கள். எல்லோரின் அலைபேசிகளும் இயங்கிக்கொண்டே இருந்தன.பலரின் அழைப்பை எடுக்க இயலவில்லை. அவர்களிடம் மன்னிப்பைக் கோருகிறேன்.
இதற்கிடையே திலகவதியின் வழிகாட்டுதலின்பேரில் மதுரவாயலில் ஏ.சி. ஜெயராமனை சந்திக்கச் சென்றார் லெனின் பாரதி. ஆன்மன் வந்து சேர்ந்தார். வழக்கறிஞர் ராஜேந்திரனும் வந்தார். காலையில் இருந்து பலர் அங்கேயே காத்திருந்தனர். பலரது பெயர்கள் தெரியாததால் குறிப்பிட இயலவில்லை. தோழர் லெனின் பாரதி பம்பரமெனச் சுழன்றார். சற்று நேரத்துக்கெல்லாம் கவிஞர் வெய்யில்.அழைத்தார். 'போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்துவிட்டதாகத் தகவல். இயற்கை மரணம்தானாம்' என்றார். அவர் பேசிக்கொண்டிருக்கையிலேயே, காவலர்கள் வந்து ரிப்போர்ட் வந்துவிட்டது. ஃபிட்ஸ், கார்டியாக் அரெஸ்ட்' என்றனர். யாராவது இரண்டு பேர் வந்து.எழுதிக்கொடுத்துவிட்டு அவரை அழைத்துச் செல்லுங்கள் என்றனர். இந்தத் தருணத்திற்குத்தானே காத்திருந்தோம்? உற்சாகம் தொற்றிக்கொண்டது. சில நிமிடங்களில் வெளியே வந்தார் ஃபிரான்சிஸ். அவர் கரங்களைப் பற்றிக்கொண்டேன்.
கண்ணீரை அடக்க சிரமமாய் இருந்தது. அத்தருணத்தில் கிடைத்த நிம்மதியைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. முதலில் தகவலை எல்லோருக்கும் தெரியப்படுத்த முகநூலில் போட்டோவோடு செய்தியைப் போட்டாயிற்று. யூமாவைப் பார்த்ததும் கண்கலங்கினார் ஃபிரான்சிஸ். எல்லோரும் சென்று தேநீர் அருந்தினோம். பின் விடைபெற்றுச் சென்றோம். மொத்த நாளும், ஃபிரான்சிஸ் கிருபா மீதான அன்பில் அனைவருக்கும் நிறைந்து வழிந்தது.
கொலைப்பழி சுமத்தப்பட்டவுடன் காவல்நிலையத்துக்கு விரைந்துவந்த ஊடகங்கள் அவர் விடுவிக்கப்படும்போது இல்லை. நண்பர்களே அங்கிருந்தோம். ஊடகங்கள் சொல்லும்.செய்தியைவிட, இது அதிகம் செய்தி சொல்கிறது என்று எழுதியிருந்தார். சந்தேகத்தின் பேரில் போலீஸ் கைது செய்தததையும், அவரை விடுவிக்க எழுத்தாளரும் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரியுமான திலகவதி உதவியைப் பெற்றதும் இப்போது கடும் விமர்சனக்கு உள்ளாகியுள்ளது.
சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்து விசாரிப்பது காவல் துறையில் உள்ள சாதாரண நடைமுறை, இதை எதற்காக குற்றம் சாட்ட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் டென்ஷன் ஆகிறார்கள். அட, விடுங்கப்பா விவகாரத்தை.