எடப்பாடியாரின் அடுத்த சாதனை, அம்மா மருந்தகத்துக்கு மூடுவிழா!

அம்மாவின் வழியில் செயல்படும் அரசு என்று மூச்சுக்கு முன்னூறு முறை சொல்வது எடப்பாடியின் பாணி.


ஆனால், அவர் செய்யும் லீலைகள் எல்லாமே அம்மா திட்டங்களுக்கு ஆப்பு வைப்பதுதான் என்று அ.தி.மு.க.வினர் கொந்தளிக்கிறார்கள். பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவுடன் அம்மா உணவகம் சிறப்பாக நடைபெற்று வந்தது. அதற்குத் தேவையான நிதி ஒதுக்குவதில் சிக்கல் ஏற்படவே, தள்ளாடுகிறது அம்மா உணவகம். அங்கே என்ன கிடைக்கும் என்பது அங்கு வேலை பார்ப்பவர்களே தெரியாத நிலை நிலவுகிறது.

அடுத்து அம்மா குடிநீர் பாட்டில்கள் ஆங்காங்கே குறைந்த விலையில் விற்கப்பட்டு வந்தது. இப்போது எந்த ஒரு பேருந்து நிலையத்திலும் அம்மா குடிநீர் பாட்டிலை பார்க்கவே முடியவில்லை. ஆனால் அம்மாவின் வழியில் டாஸ்மாக் கடைகளை மட்டும் தினம் ஒன்று என்ற ரீதியில் திறந்துகொண்டே போகிறார் எடப்பாடியார்.

இப்போது அடுத்த ஒரு திட்டத்திலும் எடப்பாடி கை வைத்துவிட்டார். ஆம், அம்மா மருந்தகத்திற்கு மூடுவிழா நடத்துகிறார். சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், இருதய கோளாறுகள் போன்ற நோய்களில் பாதிப்புக்குள்ளானவர்கள் அன்றாடம் மருந்து சாப்பிட வேண்டும். அந்த மருந்துகள் அம்மா மருந்தகத்தில் மலிவு விலையில் கொடுக்கப்பட்டு வந்தது.

இப்போது புதிய மருந்துகள் வாங்குவது நிறுத்தப்பட்டுவிட்டதால், அம்மா மருந்தகம் தன்னுடைய கடைசி மூச்சு விடுவதாக தெரிவிக்கிறார்கள். ஏழைகளுக்குப் பயன்படும் என்றுதான் அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா மருந்தகம் போன்றவை தொடங்கப்பட்டன. அதனால், இவற்றை எல்லாம் மூடிவிட்டு யாரிடம் போய் வாக்கு கேட்கப் போகிறார் எடப்பாடி?