விநாயகர் சிலை ஊர்வலம் வந்தால் கைது செய்யலாம்..! உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

அரசு உத்தரவை மீறி வீதிக்கு வீதி விநாயகர் சிலையை வைப்போம் என்று இந்து முன்னணி தீவிரம் காட்டிவரும் நிலையில், அரசு உத்தரவை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தப் போவதாக அறிவித்துள்ள இந்து முன்னணியினரைக் கைது செய்யத் தடையில்லை என்று உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு போட்டுள்ளது.


அரசு உத்தரவை மீறும் இந்து முன்னணியினரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்ய வேண்டும் என்றும், நீதிமன்றத்தில் மூத்த பத்திரிக்கையாளர் V.அன்பழகன், ரிட் மனு சென்னை உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ’கடந்த காலங்களில் விநாயகர் சதுர்த்தி என்பது வீடுகளில் சிறிய அளவில் களிமண்ணால் விநாயகர் பொம்மையை வைத்து, தின்பண்டங்களை படைத்து வழிபடுவது வழக்கம் என்றும் கடந்த சில ஆண்டுகளாக அதிகமான அளவு கொண்ட விநாயகர் சிலைகளை பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், பிளாஸ்டிக் பெயிண்ட், வார்னிஷ் மற்றும் இதர வேதிப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டு, பல இடங்களில் வைக்கப்பட்டு பின்பு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகிறது. நீர்நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் நோக்கில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பலமுறை அறிவுறுத்தியும் இந்து அமைப்பினர் கேட்பதில்லை. 

இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் காலையில் அரசு சொன்னபடி விநாயகர் சிலைகளை கடலில் கரைத்து விட்டு பின்பு மாலையில் ஊர்வலம் செல்லக்கூடாது என்று அரசு தடை விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஊர்வலமாக வலம் வருவதும், சம்பிரதாயத்திற்காக அவரையும் அவர் கூட்டத்தாரையும் போலீசார் கைது செய்து வழக்குப் பதிவதும், பின்பு அவர்களை விடுவிப்பதும் ஆண்டுக்காண்டு வாடிக்கையாக நடந்து வருகிறது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா வைரஸ் பரவி மக்களின் வாழ்க்கை நிலை முற்றிலுமாக மாறிவிட்டது. அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து கொரோனா கிருமி பரவுவதை கட்டுப்படுத்த முயற்சி செய்து வருகிறது. பெரிய கோயில்கள், ஆடித்திருவிழா மற்றும் சித்திரைத் திருவிழா போன்ற விழாக்கள் நடைபெறவும் அரசு தடை விதித்தது. 

மேலும், கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி அரசு தனது சுற்றறிக்கையில் எதிர்வரும் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவுவதும், பிறகு அதனை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பதையும் தவிர்க்க வேண்டும் என்று தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தது மட்டுமின்றி தடை செய்தும் உத்தரவும் பிறப்பித்தது.

ஆனால் இந்து முன்னணி நிறுவனர் இராம கோபாலன் மற்றும் அதன் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ஆகியோர் அரசு விதித்துள்ள தடையை மீறி ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் இடங்களில் விநாயகர் சிலையை நிறுவுவோம் என்றும் அதை தொடர்ந்து ஊர்வலமாக சென்று விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்போம் என்றும் பேட்டி கொடுத்துள்ளார்கள். இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டிருந்தார்.

 இந்த மனு சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் S. குமாரதேவன் ஆஜரானார். அப்போதுதான் சட்டத்தை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று உயர் நீதிமன்றம் உத்தரவு போட்டுள்ளது.

இனிமே, வீட்டுலேயே கொண்டாடுங்கப்பா.