லட்சியம் 100 நிச்சயம் 15! காங்கிரஸ் கே.எஸ்.அழகிரியின் சட்டசபை டார்கெட்!

இப்போது தி.மு.க. போகும் வேகத்தைப் பார்த்தால், வரும் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு வைப்பது கடினம் என்பது எல்லோருக்குமே தெரிந்திருக்கிறது.


ராகுல் காந்தியின் தலைமையில் காங்கிரஸ் இல்லை என்றால், கூட்டணி உடைவது உறுதி என்பதால், இப்போதே உஷாராகிறது தமிழக காங்கிரஸ். சமீபத்தில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. காங்கிரஸ் கட்சி தனித்து நிற்கவேண்டும் என்று, கராத்தே தியாகராஜன் சொன்ன விவகாரம் எழுப்பப்பட்டது. அனைத்து நிர்வாகிகளின் கருத்தையும் கேட்டுவிட்டு கடைசியாகப் பேசினார் கே.எஸ்.அழகிரி

“இன்றைய நிலைமைப்படி திமுக. அல்லது அதிமுக என்ற நிலைப்பாட்டில்தான் நாம் இருக்கவேண்டியதுள்ளது. நாம் தனியே நிற்கவேண்டும் என்றால், அந்த அளவுக்கு கட்சியை வளர்க்க வேண்டும். மாவட்டத்தில் கூட்டம் போடுங்கள் என்றால் கோஷ்டிச் சண்டைதான் நடக்கிறது. 

அதனால்தான் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏரிகளை தூர்வாருங்கள், நீர் நிலைகளை மீட்டெடுங்கள் என்று உத்தரவிட்டேன். அதற்கு மக்களிடையே நல்ல பலன் கிடைத்திருக்கிறது. காங்கிரஸுக்கும் மக்களுக்குமான நெருக்கம் அதிகமாகியிருக்கிறது. அதேபோன்று காங்கிரஸ் ஃபேஸ்புக் பக்கத்தில் 1 லட்சம் லைக்குகள் வருகின்றன. அதை ஐந்து லட்சம் லைக்குகளாக மாற்ற வேண்டும்.

கடந்த ஆறு மாதத்தில் நான் தமிழகம் முழுவதும் சுற்றியதில் 15 தொகுதிகள் காங்கிரஸுக்கு உறுதியாக ஜெயிக்கும் தொகுதிகளாக தெரிகின்றன. இவற்றை இன்னும் அதிகரிக்க வேண்டும். நான் இதேபோன்று பணியாற்றினால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு 100 எம்.எல்.ஏ.க்களை பெற்றுத் தர முடியும். ஆனால், என்னை பதவியில் இருந்து வெளியேற்று முயற்சிகள் நடக்கிறது’’ என்று பேசினார்.

ஆக, ஸ்டாலின் இப்பவே அவுட் ஆஃப் ரேஞ்சுக்கு போயிட்டாரோ..?