திருச்சி, பெரம்பலூர் ஆகிய தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடவில்லை என்றதும் டென்ஷன் ஆனார் நேரு. ஏனென்றால் அவருடைய உறவினர்கள், நண்பர்களுக்கு தொகுதி பெற்றுத்தருவதாக வாக்கு கொடுத்திருந்தார்.
திருநாவுக்கரசரை கைவிட்ட காங்கிரஸ்!! குழி பறிப்பாரா நேரு?

ஆனால், தலைமை அவரைக் கூப்பிட்டு சமாதானப்படுத்தியது.திருச்சி காங்கிரஸ் கட்சிக்குப் போகிறது என்றதும் கொஞ்சம் ஆறுதல் அடைந்தார். ஏனென்றால் திருச்சி தொகுதியில் தன்னுடைய நண்பரின் மகன் அடைக்கலராஜின் மகன் ஜோசப் லூயிசுக்கு வாங்கித்தந்துவிடலாம் என்று நினைத்தார்.
ஆனால், காங்கிரஸ் கணக்கோ வேறு மாதிரி இருந்தது. சம்பந்தமே இல்லாமல் திருநாவுக்கரசரைக் கொண்டுவந்து நிறுத்தினார்கள். சமீபத்தில் பதவி பறிபோன அதிருப்தியில் இருந்த திருநாவுக்கரசருக்கு ஆறுதல் சொல்வது போன்று சீட் கொடுத்தார்கள்.
எப்படியும் நேரு கோபத்தில் இருப்பார், அவரை சரிக்கட்டி கூட்டிவரவேண்டும் என்று திருநாவுக்கரசர் புத்திசாலித்தனமாக காய் நகர்த்தினார். நீங்கள்தான் எனக்கு துணை என்று கையைக் காலைப் பிடித்து ஆதரவு பெற்றுவிட்டார்.
அதன்படி இன்று தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கு வரவேண்டும் என்று நேருவை கஷ்டப்பட்டு இழுத்துவந்தார். ஆனால், பரிதாபம், அவருக்காக ஒரே ஒரு காங்கிரஸ்காரர் கூட வேட்புமனுத் தாக்கலுக்கு வரவில்லை. மாவட்டச் செயலாளர் முதல் உள்ளூர் நிர்வாகி வரை தலைமறைவாகிவிட்டார்கள்.
நடப்பது என்னவென்றே அரசருக்குத் தெரியவில்லையாம். சொந்தக் கட்சியினரே தன்னை கண்டுகொள்ளாதபோது, நேரு உண்மையில் ஆதரவு கொடுக்கிறாரா அல்லது கூடவே இருந்து குழி பறிப்பாரா என்று தெரியாமல் தவிக்கிறார்.