மீண்டும் களம் இறங்கும் கவுண்டமணி! சந்தானத்தோடு ஜோடி போட ஏற்பாடு!

காமெடி நடிகர் சந்தானம் நடிக்கும் புதிய படம் ஒன்றில் நகைச்சுவை ஜாம்பவான் கவுண்டமணி இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தமிழ் திரையுலகில் காமெடிக்கு பஞ்சம் நிலவிய போது அந்த வெற்றிடத்தை நிரப்பியவர் சந்தானம். அவரது பேச்சும் வசன உச்சரிப்பும் நகைச்சுவை ஜாம்பவானாக திகழ்ந்த கவுண்டமணியை போலவே இருந்ததால் ரசிகர்கள் அவரை அப்படியே ஏற்றுக் கொண்டனர். நூற்றுக்கணக்கான படங்களில் நடித்த சந்தானம் அதற்கு அடுத்து ஹீரோவாக அடி எடுத்து வைத்து பல வெற்றி படங்களை கொடுத்தார்.

அடுத்ததாக ஏ1 மற்றும் டகால்டி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தில்லுக்கு துட்டு மூன்றாம் பாகத்தையும் அவர் எடுக்க உள்ளார். வழக்கம் போல இந்த படத்தையும் ராம் பாலா தான் இயக்க உள்ளார். இது 3d படமாக உருவாக உள்ளது.

இதற்கு அடுத்து இயக்குனர் ஆர் கண்ணன் இயக்கும் புதிய படம் ஒன்றில் ஹீரோவாக சந்தானம் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக பட குழுவானது நடிகர் கவுண்டமணியை அணுகியுள்ளது. தொடர்ந்து அந்த குழு கவுண்டமணியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

கவுண்டமணி ஒப்புதல் கிடைத்தவுடன் படப்பிடிப்பு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை சந்தானமும் கவுண்டமணியும் இணைந்து விட்டால் நிச்சயமாக தமிழ்த் திரையுலகில் அது மறக்க முடியாத ஒரு படமாகத்தான் இருக்கும் என்று ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றன.