இ சிகரெட் விற்பனைக்கு திடீர் தடை! மத்திய அரசின் அதிரடி அவசர நடவடிக்கைக்கு காரணம் என்ன?

டெல்லி: இ-சிகரெட்களுக்கு உடனடியாக தடை விதிப்பதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.


புகையிலைப் பொருட்கள், எலக்ட்ரானிக் சிகரெட்கள் மற்றும் இதர போதை மருந்துகள் விற்பனை, பயன்பாடு நாடு முழுக்க அதிகரித்து காணப்படுகிறது. இளம்பெண்கள், இளைஞர்கள் மட்டுமின்றி சிறுவர், சிறுமிகள் கூட எளிதில் போதைப் பழக்கத்திற்கு அடிமையாக உள்ளனர். குறிப்பாக, இ-சிகரெட்கள் பயன்படுத்துவதை பலரும் ஒரு ஸ்டைலாகவே பயன்படுத்துகிறார்கள்.

இதனால், இந்திய அளவில் 400க்கும் அதிகமான பிராண்ட்களில், 150 ஃபிளேவர்களில் இ-சிகரெட்கள் விற்பனை சக்கை போடு போடுகிறது.  இ-சிகரெட் தயாரிப்பு, விற்பனை என அனைத்துமே வெளிநாட்டு நிறுவனங்களால் செய்யப்படுகிறது.

இதில் இந்திய நிறுவனங்கள் எதுவும் ஈடுபடவில்லை. இளம் தலைமுறையினர் இ-சிகரெட் எனும் போதைக்கு அடிமையாக மாறுவதை தடுக்கும் வகையில், உடனடியாக, அதனை தடை செய்ய மத்திய அரசு தீர்மானித்துள்ளது.  

இதன்படி, இ-சிகரெட் தயாரிப்பு, ஏற்றுமதி அல்லது இறக்குமதி, விநியோகம், விற்பனை, சேமித்து வைத்தல், விளம்பரம் செய்தல் என அனைத்தும் தடை செய்யப்படுவதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். டெல்லியில் இன்று (செப்டம்பர் 18) நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் தெரிவித்துள்ளார்.