ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னொரு காலத்தில் வராக க்ஷேத்ரம் என்று அழைக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் என்றால் வராக க்ஷேத்ரமா... மல்லி நாடா? ஆன்மிக அற்புதம்

பகவான் மகாவிஷ்ணு வராகமாய் அவதரித்த போது தம் தேவியருடன் இங்கு இளைப்பாறியதால் இவ்வாறு பெயர் பெற்றது. செண்பகாரண்யம் என்ற காடு, இந்த க்ஷேத்ரத்தில் ஒரு பகுதியாக விளங்கியது. அக்காட்டில் வில்லி, கண்டன் என்ற இரு சகோதரர்கள் வேடுவ மன்னர்களாக இருந்தனர். ஒருமுறை அவர்கள் வேட்டைக்கு சென்றபோது இளையவனான கண்டன் புலி ஒன்றை கண்டு அதனை விரட்டி செல்ல புலி அவனைக் கொன்று விடுகிறது. இதையறியாத வில்லி தனது தம்பியைத் தேடி அலைந்து எங்கும் காணாததால் களைப்படைந்து ஒரு மரத்தடியில் அசந்து தூங்கி விடுகின்றான்.
அவனது கனவில் பள்ளிகொண்ட பரமன் தோன்றி கண்டனின் விருத்தாந்தங்களையும், அவன் புலி அடித்து மரணம் அடைந்ததையும் கூறுகிறார். பிறகு காலநேமி என்கிற அசுரனை வதம் செய்வதற்காக நான் எழுந்தருளியுள்ளேன். அருகில் உள்ள ஆலமரத்தடி புதருக்குள் வடபத்ரசாயி என்ற பெயருடன் விமலாக்ருதி என்கிற விமானத்தினுள் சயன கோலத்தில் வீற்றிருக்கிறேன். இந்த காட்டை அழித்து நாடாக்கி எனக்கு கோவில் கட்டி வழிபாடு செய்து வந்தால் நலமருளுவேன் என்றும் கூறி மறைந்தார்.
வில்லியும் அந்த இடத்தில் உயர்ந்த ஒரு கோயிலை எழுப்பினான். அக்கோயிலைச் சுற்றி பல அழகிய தெருக்களையும், உயர்ந்த மாடங்களை உடைய வீடுகளையும் கட்டி, பின்பு சகல தேசத்திலும் உள்ள மறையவர்களை அதில் குடியேறச் செய்தான். வடபத்ரசாயிக்கு திருவிழாக்கள் முதலான சிறப்புகளை ஏற்படுத்தி தேவர்களே கண்டு வியக்கும் வண்ணம் செய்வித்து, பிறகு அப்பரமனடி சேர்ந்தான்.
இவ்வூர் புதிதாக நிர்மாணிக்கப்பட்டதால் புத்தூர் என்றும், காடாக இருந்த பகுதியை திருத்தி நகரம் ஆக்கிய வில்லியின் பெயரால் வில்லிப்புத்தூர் என்றும், பிறகு ஆண்டாள் அவதாரம் செய்ததால் ஸ்ரீவில்லிபுத்தூர் என்றும் அழைக்கப்பட்டது. இவ்வூரைச் சுற்றியுள்ள பகுதிகள் வில்லியின் தாயாராகிய மல்லியின் பெயரால் மல்லி நாடு என்று அழைக்கப்பட்டன.
12 ஆழ்வார்களில் பெரியாழ்வார் இங்கு அவதாரம் செய்ததும், அவர்தம் திருமகளாய் சூடிக்கொடுத்த சுடர்கொடி ஆண்டாள் அவதரித்ததும் இந்த ஊருக்கு பிரசித்தி பெற்ற பேராகும்.