பூலோக வைகுண்டத்தை தரிசனம் செய்துவிட்டீர்களா? உப்பில்லாத நிவேதன அதிசயம்!

உப்பிலியப்பன் கோயில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்து இருக்கும் ஒரு கோவில் ஆகும். இது 108 திவ்ய தேச வைணவக் கோவில்களில் ஒன்றாகும்


திருவிண்ணகர் என்பது பழம்பெயர், திருவிண்ணகர் சேர்ந்த அப்பன் தன் ஒப்பார் இல்லப்பன். ஒப்பிலியப்பன் என்ற பெயர் பெருமாளுக்கு அமைந்தது. காலப்போக்கில் ஒப்பிலியப்பன் என்பது உப்பிலியப்பன் என மருவிற்று. இதனால், உப்பிலியப்பன் கோயில் என்ற பெயரும் விண்ணகருக்கு அமைந்தது.

பூமாதேவியை திருமால் திருமணம் செய்து கொண்டு உப்பில்லாமல் அவள் சமைத்த உணவை உண்டதால் உப்பிலியப்பன் என்றாகி விட்டது என்றும் சொல்வதுண்டு. உப்பிலியப்பனுக்கு உப்பில்லாத நிவேதனமே உகந்தது என்பதால் இன்றும் உப்பில்லாத திருவமுதை பெருமாளுக்கு நிவேதனம் செய்கின்றனர். 

இந்த உப்பிலியப்பன் கோவில் திருநாகேஸ்வரத்திற்குத் தெற்கே ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது. மார்க்கண்டேய மகரிஷி, காவிரி, கருடன், தருமதேவதை ஆகியோருக்கு தரிசனம் தந்தவர். இத்தலம் செண்பகவனம், ஆகாசநகரம், திருவிண்ணகர், மார்க்கண்டேய க்ஷேத்திரம், ஒப்பிலியப்பன் கோவில், தென் திருப்பதி என்ற பெயர்களும் இத்தலத்திற்கு உண்டு.

நம்மாழ்வாருக்கு ஐந்து வடிவங்களில் காட்சி அளித்துள்ளார். அவை பொன்னப்பன், ம்ணியப்பன், முத்தப்பன், என்னப்பன், திருவிண்ணகரப்பன். முற்காலத்தில் மிருகண்டு மகரிஷியின் புத்திரன் மார்கண்டேய மகரிஷி பூமாதேவி தனக்கு மகளாகவும் திருமால் மாப்பிள்ளை ஆக வேண்டும் என கடும் தவம் செய்தபோது துளசி வனத்தில் அழகிய பெண் குழந்தையைக் கண்டு வியந்து எடுத்து பூமாதேவி என பெயர்சூட்டி வளர்த்தார்.

திருமணவயதை அடைந்தாள். அவதார நோக்கம் நிறைவேறும் காலம் வந்தது. திருமால் வயது முதிர்ந்த அந்தணர் வேடம் பூண்டு மார்கண்டேயர் குடிலுக்கு வந்து பூமாதேவியைத் தனக்கு மணம் முடிக்கும்படி கேட்க ஏதேதோ கூறியும் கேட்கவில்லை. மகளுக்கு உப்பு போட்டு சமைக்க தெரியாது என கூறினார். விடவில்லை திருமால்.

செய்வதறியாது கண்மூடி பெருமானை வேண்டி கண் திறந்தபோது உப்பிலியப்பனே முன் தோன்றி நான் உப்பையே விட்டு விடுகிறேன், உன்னிடம் வளர்ந்தது பூமாதேவியே என உரைத்து மணம் முடித்தார். மார்க்கண்டேயர் விருப்பம் நிறைவேறியது. ஆதலால் இங்கு பிரசாதத்தில் உப்பில்லாமல் உணவு நைவேத்தியம் செய்து வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு வருட ஐப்பசி சிரவண நட்சத்திரத்தன்று திருக்கல்யாணம் சிறப்பாக நடக்கும். இத்திருகல்யாணத்தில் கலந்து கொண்டால் திருமணத் தடை நீங்கி குழந்தை பேறு கிட்டும் என நம்பப்படுகிறது, பங்குனி மாதம் சரவண (திருவோணம்) நட்சத்திரத்தில், மார்க்கண்டேயர், பெருமாளுக்கு பூமாதேவியை மனம் செய்து வைத்தார். பிறகு பெருமாள் மார்க்கண்டேயருக்குக் காட்சி கொடுத்தார்.

மார்க்கண்டேயர், பெருமாள் இங்கேயே தங்க வேண்டும் என்றும், தன் மகளை விட்டு ஒரு கணமும் நீங்கக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.  பெருமாள் இங்கேயே தங்கியதால் இந்த இடம் விண்ணகரம் என்று பெயர் பெற்றது. விண்ணகரம் என்பதற்கு விண்ணுலகத்து நகரம் என்றும், விஷ்ணு வசிக்கும் நகரம் என்றும் பொருள் கொள்ளலாம்.

இரண்டுமே வைகுண்டத்தைத்தான் குறிக்கின்றன. அதனால் இந்தத் திருத்தலம் 'பூலோக வைகுண்டம்' என்று அழைக்கப்படுகிறது. மார்க்கண்டேயருக்குக் கொடுத்த வாக்குக்கு இணங்க, வீதி உலா வரும்போதும் பெருமாள் தாயாருடனேயே வருவார்.  கோயிலுக்குள் நுழைந்ததும் வலது புறம் அழகாகத் தோற்றமளிக்கும்  திருக்குளம். 'பகல்இராப் பொய்கை' என்று குளத்தின் சுவற்றில் பெரிதாக எழுதி வைத்திருப்பதைப்  பார்த்ததும் கொஞ்சம் வியப்பு ஏற்படும்.

அதென்ன பகல் இராப் பொய்கை (சம்ஸ்கிருதத்தில் அஹோராத்ர புஷ்கரணி) ஒரு முனிவரின் சாபம் பெற்ற ஒரு அரசன் பறவையாக மாறி இந்தக்குளத்துக்கு அருகிலிருந்த ஒரு மரத்தில் இருந்து வந்தான். ஒருமுறை புயல்காற்றில் பறவை உட்கார்ந்திருந்த மரக்கிளை முறிந்து குளத்துக்குள் விழ, தண்ணீரில் மூழ்கி எழுந்த பறவை சாபம் நீங்கி அரசனாக மாறியது. அதனால் இந்தக் குளத்தில் இரவு பகல் எப்போது வேண்டுமானாலும் நீராடலாம் என்ற நியதி ஏற்பட்டது.

(பொதுவாகக் கோயில் குளங்களில் பகலில் மட்டும்தான் நீராடலாம்,) அதுதான் பகல்இராப் பொய்கை.மூலவர் ஒப்பிலியப்பன், விண்ணகரப்பன், வெங்கடாசலபதி என்ற பெயர்களில் அழைக்கப் படுகிறார். இவர் திருப்பதிப் பெருமாளுக்கு அண்ணன் என்றும் திருப்பதியில் நிறைவேற்ற வேண்டிய பிரார்த்தனைகளை இங்கே நிறைவேற்றலாம் என்பதும் ஐதீகம். 

மார்க்கண்டேயர் என்றும் பதினாறு வயது உள்ளவராக வாழும் சிரஞ்சீவி. இவர் கர்ப்பக்கிரகத்தில் இருப்பதால், இந்தத் தலத்தில் ஆயுஷ் ஹோமம், (முதல் வயது நிறைவு விழா) மற்றும் சஷ்டியப்த பூர்த்தி (60ஆம் ஆண்டு விழா) ஆகியவற்றை நடத்துவது சிறப்பு..