ஆண்-பெண் இருபாலருக்கும் மணம் முடித்து வைக்கும் முன் ஜாதகத்தை ஆராயும்போது செவ்வாய் தோஷம் உள்ளதால் அதிகமான ஆண்-பெண்களுக்கு திருமணம் தடைப்படுகிறது, தாமதமாகிறது. இதனால் பெற்றோர்களும் கவலை கொள்கிறார்கள்.
செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடை படுகிறதா? இந்தக் கோயிலுக்குப் போங்க! மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும்!

லக்னத்துக்கு 2,4,8,12 ஆகிய இடங்களில் செவ்வாய் பகவான் இருந்தால் உடனே செவ்வாய் என்று முடிவு செய்து விடுகின்றார்கள். சாதாரண பொது விதியை மட்டும் கருத்தில் கொண்டு ஜாதகங்களை பார்க்கக்கூடாது.
திருமங்கலக்குடி பஞ்சமங்கலக் ஷேத்திரமாக கருதப்படுகிறது. தலத்தின் பெயர் மங்கலக்குடி, தாயாரின் பெயர் மங்கலாம்பிகை, கோபுரம் மங்கல விமானம், புஷ்கரிணி மங்கல தீர்த்தம் மற்றும் வீற்றிருக்கும் மங்கல விநாயகர் என்று அனைத்திலும் மங்கலகரமாக விளங்கும் புண்ணிய தலம் இது. ராகு, கேது மற்றும் சனி கிரகதோஷத்தால் திருமணம் தாமதித்து வரும் இளம் பெண்கள் தொடர்ந்து ஐந்து நாட்கள் மங்கலாம்பிகையை தியானம் செய்து வந்தால் திருமண பாக்கியத்தை அடைந்திடுவர்.
முதலாம் குலோத்துங்கசோழனிடம், அலைவாணர் என்ற அமைச்சர் இருந்தார். இவர் சிவபெருமானிடம் அளவிலா பக்தி கொண்டவர். தான் வணங்கும் சிவபெருமானுக்கு தான் வசிக்கும் திருமங்கலக்குடியில் சிவாலயம் ஒன்று அமைக்க ஆர்வம் கொண்டார். ஆனால் அதற்கு நிறையப் பணம் வேண்டுமே! என்ன செய்வது? என்று யோசித்தார்.
வரி வசூலில் வரும் பணம் யாவும், அலைவாணர் மூலமே கஜானாவுக்குச் செல்ல வேண்டும். தவறு என்று தெரிந்தும் சிவபெருமானின் மேல் இருந்த பக்தியால் அலைவாணர் அந்தத் தவறை செய்யத் துணிந்தார். ஆம்! வரி வசூலில் வசூலான பணம் முழுவதையும், கோவில் கட்டுவதில் செலவழிக்கத் தொடங்கினார். கோவிலும் கட்டி முடிக்கப்பட்டது. அரசின் வரிப்பணத்தை அமைச்சர் கோவில் கட்ட செலவிடுகிறார் என்று கேள்விப்பட்ட மன்னன் கோபம் கொண்டான்.
மன்னனின் கோபத்துக்கு அஞ்சிய அமைச்சர் தன் உயிரை தானே மாய்த்துக் கொண்டார். கணவனின் முடிவை அறிந்த அவரது மனைவி, அவர் கட்டிய கோவிலில் உள்ள இறைவனிடமும், இறைவியிடமும் கண்ணீர் பெருக கதறி அழுதாள். தன் கணவனுக்கு உயிர்ப்பிச்சை தருமாறு வேண்டினாள். மனமிறங்கினர் இறைவனும், இறைவியும். இறந்து போன அலைவாணர், உறக்கத்தில் இருந்து எழுந்ததைப் போல எழுந்து வந்தார்.
தன் பக்தனுக்கு மீண்டும் பிராணனை அருளி உயிர்ப்பித்ததால், இங்குள்ள இறைவன் ‘பிராண நாதேஸ்வரர்’ என அழைக்கப்படுகிறார். அமைச்சரின் மனைவியின் மாங்கல்யத்தைக் காத்து அருள் புரிந்ததால் இத்தல இறைவி ‘மங்கள நாயகி’ என அழைக்கப்படுகிறார்.
இக்கோயிலில் திருமாங்கல்யம் மற்றும் புடவை ஆகியவற்றை தாயாருக்கும், தொடர்ந்து ஐந்து வெள்ளிக்கிழமைகள் ஆராதிக்கும் பக்தர்களுக்கு மாங்கல்ய தோஷம், ராகு, கேது முதலிய கிரக தோஷங்களும் விலகி, திருமணத்திற்கு உரிய தடைகளும் நீங்கி, மாங்கல்யபாக்கியம் உண்டாகும். பக்தர்கள் இங்கிருந்து கிடைக்கும் மாங்கல்ய சரடு கட்டினால் அவர்களுக்கு எல்லா மாங்கல்ய தோஷங்களும் விலகும்.
திருமங்கலக்குடி கும்பகோணத்திலிருந்து சுமார் 15கி.மீ தொலைவில் உள்ளது. பிராணநாதேஸ்வரர் கோயிலுக்கு சுமார் அரை கி.மீ வடகிழக்காக சூரியனார் கோயில் அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்தும் மயிலாடுதுறையிலிருந்தும் இங்கு வருவதற்கு பேருந்து வசதி உண்டு.