தொண்டை நாட்டில் அமைந்துள்ள பாடல் பெற்ற, 32 தலங்களில், 20வது திருத்தலமாக திருவொற்றியூர் விளங்குகிறது. மிகச் சிறப்பான தலம். நினைத்தாலே முக்தி அளிக்கும் சிறப்புடையது.
காவல் தெய்வம் உக்கிர காளி..! கண்ணகியின் வடிவமா இவள்?

இத்தலதிலுள்ள ஆதிபுரீஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. அருள்மிகு ஆதிபுரீஸ்வரர் கோயில் சுற்றுப்பிரகாரத்தில் வடக்குப் புறமாக வடக்குத் திசையைப் பார்த்தவாறு வட்டப்பாறை அம்மன் சன்னிதி உள்ளது. ஆதிபுரீஸ்வரருடனே எழுந்தருளிய இந்த காளிக்கு உயிர் பலியும் ஆகாச பூஜையும் கொடுக்கும் வழக்கம் பல நூறு வருடங்களாக இருந்து வந்திருக்கிறது. இங்குள்ள பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றில் இது பற்றிய குறிப்புகள் உள்ளதாம். சோழ மன்னர்கள் இந்தப் பகுதியை ஆண்ட காலத்தில் உக்கிரமான இந்த காளியை போர் தெய்வமாக வழிபட்டிருக்கிறார்கள். இந்த கடற்கரை பகுதிக்கு இவள் காவல் தெய்வமாக இருந்திருக்கிறாள்.
இவளைப் பற்றி இந்த ஊரில் ஒரு கதையும் சொல்கிறார்கள். மதுரையை எரித்த கண்ணகி தான் இந்த அம்பாளாம். மதுரையை எரித்த உக்கிரத்துடன் வந்து அமர்ந்தவளின் உக்கிரத்தை ஒரு கிணற்றுக்குள் அடக்கி அவளின் கோபத்தை தணித்தாராம் சிவபெருமான். இந்த அம்மன் ஒரு காலத்தில் நடு ஜாமங்களில் கிணற்றுக்குள் இருந்து வெளியில் வந்து கோவில் வளாகத்தில் ஓங்காரமிட்டபடி நடனம் புரிந்திருக்கிறாளாம். இந்த அம்மனைப் பற்றி கேள்விப்பட்ட ஆதிசங்கரர் இத்தலத்துக்கு வருகை தந்து ஸ்ரீசக்கர யந்திரம் ஸ்தாபித்து காளியம்மன் உறையும் கிணற்றின் வாயை அந்த சக்கரத்தைக் கொண்டு மூடிவிட்டு சாந்த வடிவில் ஒரு அம்மனை பிரதிஷ்டித்திருக்கிறார்.
பக்தர்கள் தற்போது வழிபடும் வட்டப்பாறை அம்மன் ஆதிசங்கரரால் பிரதிஷ்டிக்கப்பட்டவள்தான். அம்மனுக்கு இருபுறமும் சப்தமாதர்கள் அமர்ந்திருக்கிறார்கள். அம்மனுக்கு முன்பாக ஸ்ரீசக்ர யந்திரம் மூடிய கிணறும் உள்ளது. கிணறு வட்ட வடிவில் உள்ளதால் இவளை வட்டப்பாறை அம்மன் என்று அழைக்கிறார்கள்.
வருடம் தோறும் சித்திரை மாதம் வட்டப்பாறை அம்மன் உற்சவம் நடைபெறுகிறது. கொடியேற்றத்துடன் துவங்கும் உற்சவம், பல்வேறு சிறப்பு பூஜைகள் ஆராதனைகள் என கோலாகலமாக நடைபெறுகிறது. அப்போது உற்சவர் தாயாருடன் எழுந்தருளுகிறார். இந்த உற்சவத்தில் அருகில் உள்ள ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து கலந்து கொள்கிறார்கள்.