கற்சிலை எப்படி தெய்வீக தன்மை பெறுகிறது தெரியுமா?

ஆகம சாஸ்திரத்தின்படி ஒரு கற்சிலையை வடிக்க வேண்டுமானால் அதற்கான கருங்கல்லை தேர்ந்தெடுப்பதில் தொடங்கி கற்சிற்பம் உருவாவது வரை ஏகப்பட்ட சாஸ்திரங்களை கடைப்பிடிக்க வேண்டும்.


சிற்பசாஸ்திரம், ஆகம விதிகளின்படி கடவுள் சிலைகள் உருவாக்கப்பட்டதும் அவற்றை ஒரு நல்ல நாளில் ஜலவாசத்தில் வைக்க வேண்டும். அதாவது, மூன்று புண்ணிய நதிகளின் நீர், அந்தக் குறிப்பிட்ட கடவுள் சிலை வைக்கப்படவுள்ள தல தீர்த்தம் ஆகியவற்றை ஒன்றாக்கி அதில் கற்சிலையை ஒரு மண்டல காலம் (48 நாட்கள்) அமிழ்த்தி வைக்க வேண்டும். இப்படி ஜலவாசத்தில் இருக்கும் சிலை குளிர்ந்து உறுதியாகும். அந்த சிலையில் ஏதேனும் விரிசல்கள், பிளவுகள் இருந்தால் இந்தக் காலகட்டத்தில் தெரிந்துவிடும்.

இப்படி 48 நாட்கள் நீரில் ஊறிய சிலையை எடுத்து அடுத்ததாக தான்ய வாசத்தில் வைக்கிறார்கள். சிலை மூழ்கும் அளவுக்கு நவ தானியங்களைக் கொட்டி வைக்கிறார்கள். நவதானியத்தில் இருந்து வெளியாகும் வெவ்வேறு விதமான வெப்பம் அந்த சிலையை தாக்கும். இதனால் சிலையின் வலிமையற்ற பகுதி சேதமுறும். தேரை போன்ற பாதிப்பு கொண்ட சிலை என்றால் அந்த தான்ய வாசத்தில் உடைந்து சிலையின் குற்றத்தை காட்டிக்கொடுத்துவிடும்.

முன்பு மன்னர் ஆட்சியின் பொழுது உருவாக்கப்பட்ட சிலைகள் மொத்தம் ஆறு வகையான வாசத்தில் வைக்கப்பட்டது. ஜலவாசம், தான்யவாசம், நவரத்தினங்களில் மூழ்க வைக்கும் ரத்ன வாசம், பொற்காசுகளில் மூழ்க வைக்கும் தனவாசம், பின்னர் பட்டாடை வஸ்திர வாசம் என்று வைக்கப்பட்டு இறுதியில் சயன வாசத்தில் கடவுள் சிலை வைக்கப்படும். அதாவது ஹம்சதூளிகா மஞ்சம் எனப்படும் அன்னத்தின் சிறகுகளாலான படுக்கையில் மான்தோல் விரித்து அதன் மீது கடவுள் சிலை வைக்கப்படுமாம். இந்த ஆறு வாசமும் ஒவ்வொரு மண்டலம் என்ற கணக்கில் மொத்தம் 288 நாட்கள் வைக்கப்படும். இக்காலத்தில் இதெல்லாம் சாத்தியமில்லை என்பதால் ஜலவாசம், தான்ய வாசத்தோடு முடித்துக் கொள்ளப்படுகிறது.

தன, ரத்ன, சயன வாசத்தில் இருக்கும்போது தெய்வ அதிர்வினை பெறும். இப்படி அறிவியல் முறையிலான ஐதீகப்படி சிலையை வைத்து குளிர், உஷ்ணம் இவற்றால் பாதிக்கப் படாத நிலையை சிலைக்கு கொண்டு வருவார்கள். பின்னர் 7 நாட்கள் வரை புஷ்பாதி வாசத்தில் சிலையை வைக்கிறார்கள். பல்வேறு விதமான நறுமண மலர்களில் சிலை இருக்கும் போது அந்த மலர்களின் மூலிகை சத்தினைப் பெறுகிறது.

புஷ்பாதி வாசத்துக்குப் பிறகு சயனாதி வாசம். நல்ல மஞ்சத்தில் தலையணை உள்ளிட்ட வசதிகளோடு கிழக்கே பார்த்து கடவுள் சிலையை வைத்து விடுவார்கள். இத்தனைக்குப் பிறகுதான் கண் திறக்கும் புனித நிகழ்ச்சி நடைபெறும். தகுந்த பூஜைக்குப் பிறகு தங்க ஊசி கொண்டு கண்ணில் மெல்லிய கீறலால் கருவிழி திறக்கப்படும். அதன் பிறகே தெய்வ சிலைக்கு முழுமையான தெய்வீக அழகு வருகிறது.

பின்னர் கும்பாபிஷேகத்தின்போது தொடர்ச்சியாக நடைபெறும் யாகசாலை பூஜையின்போது வைக்கப்பட்ட புனிதநீர், காப்புக் கயிறு போன்ற பல்வேறு பொருட்களால் சுவாமிக்கு தெய்வீகத்தன்மை ஊட்டப்படுகிறது. பின்னர் ஸ்பரிச வாதி என்னும் கடைசி வாசத்தில் சுவாமியின் நவ துவாரங்களுக்கான மந்திரம் ஓதப்படும். அதனால் அந்தச் சிலைக்கு மின்காந்த சக்தி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கிடைக்கப்பெற்று ஆற்றல்கள் நிரம்பிய முழுமையான கடவுள் திருமேனியாக மாற்றி அமைக்கப்படுகிறது.

கல்லில் இருந்து வடிக்கப்பட்ட சிலை இவ்வாறு பல்வேறு அறிவியல், ஆன்மிக வழிமுறைகளின்படி தான் அருள்மிக்க கடவுளாக மாறுகிறது.