திருச்சி ஓயாமாரி மயானம். இதன் எதிரே சாலைக்கு கீழே ஓடிக்கொண்டிருக்கிறது காவேரி நதி.
திருச்சி காவேரிக் கரையின் ஓயாமாரி சுடுகாடு அரிச்சந்திரனின் மயானக் கோயிலா?

மயானத்தின் முகப்பில் எழுந்தருளியுள்ளார் அரிச்சந்திர சுவாமி. காசி மயானத்தில் அமைந்திருக்கும் அரிச்சந்திர சுவாமி புண்ணிய கங்கை நதியை பார்த்தபடிதான் உள்ளார். இந்தியாவில் காசி மற்றும் திருச்சி ஓயாமாரி மயானம் என இரண்டு இடங்கள் தவிர வேறு எங்கும் மயானங்களில் அரிச்சந்திர சுவாமிக்குக் கோவில் இல்லை எனக் கூறப்படுகிறது
மணிமண்டபம் முன்பாக இரு காவலர்கள் நின்ற வண்ணம் காட்சி அளிக்கின்றனர். இதற்கு காரணம் மாற்றங்கள் ஆயிரம் அரங்கேறினாலும் அரிச்சந்திரர் ஆதியில் ஒரு மகா சக்கரவர்த்தி. அதனால்தான் அந்த காவலர்கள். உள் மண்டபத்தில் கேரள பாணியில் நான்கு மூலைகளிலும் நான்கு நாகர்கள. 5 படிகளுக்கு மேல் உள்ள மண்டபத்தில் 6 அடி உயரத்தில் மிக கம்பீரமாக அரிச்சந்திர சுவாமி வடதிசை நோக்கி நின்று காட்சி தருகிறார்.
அரிச்சந்திர சுவாமிக்கு பின்புறம் தெற்கு திசை நோக்கி நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார் காலபைரவர். அரிச்சந்திர மகாராஜா 12 ஆண்டுகள் கடும் சிரமங்களுக்கு ஆளாகி இருக்கிறார். அப்பொழுது காலபைரவர் அவர் முன் தோன்றி ’உனது சத்யமே நித்யம் ஆகும் வாய்மையே எப்போதும் வெல்லும் உனக்கு என்றும் துணை இருப்பேன்’ என்று வரம் அளித்துள்ளார். இதனால் தான் இங்கு காலபைரவருக்கு சிலை.
இவற்றுக்கு எதிரே மயானத்தின் உள்ளே ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி மேடை. ஆண்டு தோறும் மகா சிவராத்திரியன்று நள்ளிரவில் மயான பூஜை இந்த மேடை மீது தான் நடைபெறுகிறது. இங்கு தீட்டு என்பதே கிடையாது. மூலவர் அரிச்சந்திரருக்கு வியாழக்கிழமை தோறும் குரு பூஜை, அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். ஞாயிற்று கிழமை ராகு கால பூஜை இங்கு மிகவும் விசேஷம். ராகு கால அபிஷேகம், அர்ச்சனை, சிறப்பு பூஜை முடிந்தவுடன் வழிபாட்டில் கலந்து கொண்ட பக்தர்கள் மீது பைரவர் அபிஷேக தீர்த்தம் தெளிக்கப்படும். பக்தர்கள் இங்கு வந்து வேண்டிக் கொண்ட உடனே அக்கோரிக்கை நிறைவேறுகிறது.
தேய்விறை அஷ்டமி நாளில்
பக்தர்கள் தேங்காய் கொண்டு வந்து அதனை பைரவர் பாதங்களில் வைத்து எடுத்துச் செல்கின்றனர்.
அதனை வீட்டு பூஜை அறையில் வைத்து பிரார்த்தனை செய்தால் நினைத்த காரியம் நிச்சயம் நிறைவேறும்
என்பது நம்பிக்கை. பிரார்த்தனை நிறைவேறியதும் தேய்பிறை அஷ்டமி நாளில் அந்தத் தேங்காயை
கோயிலுக்கு கொண்டு வந்து யாகக் குண்டத்தில் சமர்ப்பித்து விடுவர். இது தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது.