நாடாளுமன்ற ராஜ்யசபா எம்.பியாக மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் அறிவிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ராஜ்யசபா எம்.பி., ஆகிறார் ஸ்டாலின் மருமகன் சபரீசன்!

தி.மு.க தலைவர் கலைஞர் இருந்த போது டெல்லி விவகாரங்களை முரசொலி
மாறன் கவனித்து வந்தார். அவர் மறைவுக்கு பிறகு தயாநிதி மாறன், திருச்சி சிவா உள்ளிட்டோர்
கவனித்தனர். பின்னர் தயாநிதிமாறன் ஓரம் கட்டப்பட்டு கனிமொழி தி.மு.கவின் டெல்லி பணிகளை
மேற்கொண்டு வந்தார். ஆனால் கலைஞர் உடல் நிலை பாதிக்கப்பட்டதை தொடர்ந்து டெல்லி விவகாரங்களில்
இருந்து கனிமொழியும் ஓரம்கட்டப்பட்டார்.
கடந்த ஓராண்டாகவே
டெல்லியில் தி.மு.கவின் முகமாகியிருப்பவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் தான். கலைஞர்
மறைவை தொடர்ந்து தி.மு.கவின் சார்பில் டெல்லியில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களுடன்
அதிகாரப்பூர்வமாக பேசும் அதிகாரம் சபரீசனுக்கு கிடைத்தது. இடதுசாரித் தலைவர்களுடன்
ஸ்டாலின் மேற்கொண்ட கூட்டணி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ததும் சபரீசன் தான்.
இதே போல் கலைஞர்
சிலை திறப்பு விழாவுக்கு சோனியா காந்தியை அழைத்து வந்து அசத்தியதும் சபரீசன் தான்.
கடந்த நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு அரசியலில் ராகுலை களம் இறக்கிவிட்டு தீவிர
அரசியலில் இருந்து சோனியா ஒதுங்கிவிட்டார். உடல் நிலை பாதிக்கப்படட நிலையில் பொது நிகழ்ச்சிகள்
எதிலும் சோனியா கலந்து கொள்ளாமல் இருந்தார்.
ஆனால் சபரீசன் தான் டெல்லி சென்று சோனியாவுக்கு
நெருக்கமானவர்களை சந்தித்து பேசி, கலைஞர் சிலை திறப்பு விழாவுக்கு சோனியாவை அழைத்து
வந்தார். இதன் மூலம் ஸ்டாலினுக்கு தனது மருமகன் மீதான நம்பிக்கை அதிகமாகியுள்ளது. எனவே
அவரை ஊக்கப்படுத்தும் வகையிலும், டெல்லியில் பிற கட்சி தலைவர்கள் உள்ளிட்டவர்களை எளிதாக
சந்தித்து பேச வசதியாகவும் சபரீசனை மாநிலங்களவை எம்.பியாக்க வேண்டும் என்று ஸ்டாலின்
குடும்பத்தினர் பேச ஆரம்பித்துள்ளனர்.
வரும் ஜூலை மாதம் தமிழகத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பிக்கள் பதவிக் காலம் முடிகிறது. அந்த சமயத்தில் ஸ்டாலின் தனது மருமகன் சபரீசனை எம்.பியாக்க டெல்லியில் தி.மு.கவின் பிரதிநிதியாக அவரை அனுப்பி வைப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.