உங்க ராசியில் சந்திரன் அமைப்பு எப்பூடி இருக்குது? என்ன தொழில் செட்டாகும்னு தெரிஞ்சுக்கோங்க!

சந்திரன் நீரைக் குறிக்கும் ‘ஜல கிரகம்’. அவருடைய ராசியான கடகம், ‘நீர் ராசி’.


ஒருவருக்குக் கடகத்தில் இருக்கும் கிரகத்தின் தசை நடைபெற்றாலோ அல்லது சந்திரன், ‘சர ராசிகள்’ எனப்படும் மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய இடங்களில் இருந்தாலோ, சந்திரனின் தசையில் கடல் தாண்டி வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பை ஜாதகர் பெறுவார்.

கடலிலும், கடற்கரையிலும், கப்பல் துறைமுகங்களிலும், ஆற்றோரங் களிலும், நீர் நிலைகளிலும் ஒருவரை வேலை செய்யவைப்பவர் சந்திரன்தான். சந்திரன் 10-ம் இடத்து அதிபதியாகவோ, 10-ம் இடத்துடன் தொடர்பு கொண்டிருந்தாலோ அவருக்குத் திரவப் பொருள்கள் மூலமான தொழில் அமையும். சந்திரனின் வலுவுக்கு ஏற்றாற்போல ஜாதகர் ஜூஸ் கடை, மினரல் வாட்டர், பால் வியாபாரம் போன்ற தொழில்களில் ஈடுபடுவார்.

ஒன்பது கிரகங்களில் சந்திரன் மட்டுமே வேகமான இயக்கம் கொண்ட ‘துரித கிரகம்’. சந்திரனை ராசிப்படியோ, லக்னப்படியோ தொழில் தானாதிபதியாகக்கொண்டவர்கள், உற்பத்தியாகி உடனே அழியும் பொருள்களான பழங்கள், காய்கள், மலர்கள் மற்றும் உணவுப்பொருள்கள் போன்றவற்றை விற்று, அதன் மூலம் லாபம் அடைபவர்களாக இருப்பார்கள்.

சந்திரனின் சில குறிப்பிட்ட யோகங்கள் மகரம், கும்பம், துலாம், விருச்சிகம், மிதுனம், கன்னி ஆகிய ஆறு லக்னங்களுக்கும் முழுமையான பலன்களைத் தராது. அதிலும் சனியின் மகரம், கும்பம் லக்னங்களுக்கு சந்திரன் நல்ல பலன்களைத் தரமாட்டார்.

உத்தரகாலாம்ருதத்தின் 17-வது ஸ்லோகத்தில், கவி காளிதாசர் கிரகங்களின் சுப, அசுபத் தன்மையைக் குறிப்பிடும்போது, சூரியனுக்கு நேர் எதிரில் பவுர்ணமியன்று இருக்கும் பூரணச் சந்திரன் குருவுக்கு நிகரான ‘முழு சுபர்’ என்று சொல்லியிருக்கிறார்.

ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் ராசி தவிர்க்க முடியாத அமைப்பாகக் கருதப்படும். உலகின் வேறு எந்த ஜோதிட முறையிலும் இல்லாதவாறு, நம் ஜோதிடத்துக்கு மட்டுமே உரிய தனிச்சிறப்பான ‘உடுமகா தசை’ எனப்படும் தசா புக்தி அமைப்பு, ஒருவர் பிறக்கும் நேரத்தில் - சந்திரனுக்குப் பின் இருக்கும் நட்சத்திரத்தின் அடிப்படை யிலேயே அமைகிறது.

பூமியில் பிறந்தது முதல் இறக்கும் வரையிலான, ஒருவரின் வாழ்க்கைச் சம்பவங்கள் அனைத்தும் அவர் பிறக்கும் நேரத்தில் சந்திரனுக்குப் பின் இருக்கும் நட்சத்திரத்திலும், அதனையடுத்து அவர் இருக்கப்போகும் நட்சத்திரங்களின் தொடர்ச்சியிலுமே அமைகின்றன. இதற்கு, கோள்சாரம் எனப்படும் சந்திரனின் அடிப்படையிலான தினசரி கோள் இயக்கங்கள் துணை நிற்கின்றன.

சூரியனைப் போன்ற நட்சத்திரங்களின் நிரந்தர ஒளியை உள்வாங்கி, ஓர் ‘இரட்டைப் பிரதிபலிப்பான்’ போல செயல்பட்டு, செயல்களையும் அதன் வழியாகச் சம்பவங் களையும் உருவாக்கி, ‘மதி’ எனும் சந்திரன் மனிதனை வழி நடத்துகிறது.

`இரட்டைப் பிரதிபலிப்பான்’ என்று இதைச் சொல்வதற்குக் காரணம், மற்ற கிரகங்கள் அனைத்தும் சூரியனின் ஒளியை மட்டுமே வாங்கி ஒளிக் கலப்பு செய்து பூமியின் உயிரினங்கள் மீது ஆதிக்கம் செலுத்தும். சந்திரன் ஒருவர் மட்டுமே சூரிய ஒளியையும், சூரியனைப் போன்ற நமது கேலக்சியின் மற்ற முக்கிய நட்சத்திரங்களின் ஒளியையும் உள்வாங்கி பூமியில் செயல்களை நடத்திவைக்கிறார்.

இதற்குச் சந்திரன் பூமிக்கு மிக அருகில் இருப்பதும், அவர் மட்டுமே இருப்பதும்... அதாவது மற்ற கிரகங்களுக்கெல்லாம் ஒன்றுக்கு மேற்பட்ட துணைக்கோள்கள் இருக்கும் நிலையில், பூமிக்குச் சந்திரன் ஒருவர் மட்டுமே என்ற நிலை அமைந்ததும் ஒரு காரணம். சுக்கிரனுக்கும் புதனுக்கும் துணைக்கோள்கள் கிடையாது.

சந்திரன் ஒருவரின் ஜாதகத்தில் நன்மை தரும் அமைப்பில் இருந்து, அவரும் நல்ல நிலையில் இருந்தால் ஜாதகருக்கு நன்மைகள் கிடைக்கும்; கெடுதல் தரும் அமைப்பில் இருந்தால், நற்பலன்கள் குறையும். ஒவ்வொரு கிரகமும் சில பல விஷயங் களுக்குக் காரகத்துவம் பெற்றிருக்கும்.

மனம் அல்லது புத்தி, அன்னை, மலர், இளம்பெண், கலைகளில் ஆர்வம், நீர் சம்பந்தமானவை, கடல், கப்பல், நெல், அரிசி, பால், காய்கறிகள், வெள்ளி, வெண்கலம், அடிக்கடி பிரயாணம், கிணறு, குளம், ஆறு போன்ற நீர் நிலைகள், ஆஸ்துமா போன்ற நோய்கள், வெளிநாட்டுப் பயணம், இரவு, முத்து, தயிர், வெள்ளை, 48 நிமிடங்கள் கொண்ட ஒரு முகூர்த்த நேரம்.

உப்பு, களையான முகம், தேன், அழகு மற்றும் அழகு சாதனப் பொருள்கள், பனி, இரவில் வேலை செய்தல், மேற்குத் திசை சம்பந்தமான விஷயங்கள், மீன் உள்ளிட்ட நீரில் வாழும் உயிரினங்கள், பட்டு, மெல்லிய துணி போன்றவை சந்திரனின் காரகத்துவங்கள் பெற்றவை. ஜாதகத்தில் சந்திரன் பலம் இல்லாத நிலையில்,

ஒருவருக்கு மேலே சொன்ன விஷயங்களில் சாதகமற்ற பலன்கள் நடக்குமானால், சந்திரனின் அருளைப் பெற, சந்திர பரிகாரம் தொடர்பான கோயில்களுக்குச் சென்று வழிபடலாம்.

சந்திரன் ஒருவருடைய ஜாதகத்தில் லக்னாதி பதியாகி பலவீனம் அடைந்திருந்தாலோ, நன்மை தரும் பாவங்களுக்கு அதிபதியாகி பலவீனம் அடைந்திருந்தாலோ, அவருக்குரிய ஸ்தலங்களுக்குச் சென்று வழிபடுவதன் மூலம் சந்திரனின் வலுவைக் கூட்டிக்கொள்ள முடியும்.

கும்பகோணம் அருகில் உள்ள திங்களூரில் இருக்கும் திருக்கோயில் சந்திர ஸ்தலம். சந்திரனை லக்னாதிபதியாகவோ, யோகாதிபதியாகவோ கொண்டவர், தன்னுடைய ஜன்ம நட்சத்திர நாளில், இந்தக் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.