ஆடி மாதம் நள்ளிரவு நேரத்தில் ஆண்கள் மட்டுமே கொண்டாடும் விசித்திர திருவிழா தெரியுமா?

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ளது மலையாம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.


இங்கு போதமலை மலையாள தெய்வம் என்று அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற நூற்றாண்டு பழமைவாய்ந்த பொங்களாயி அம்மன் கோவில் உள்ளது. ஆலமரத்து அடியில் அமைந்துள்ள பொங்களாயி அம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் ஆடி பெருக்கு பண்டிகையையொட்டி நடந்து வருகிறது.

வழக்கமான கோயில்களை போல் கோபுரங்கள் இல்லாமல், ஆலமரத்தடியில் ஆண்டாண்டு காலமாய் அமர்ந்து பக்தர்களுக்கு அம்மன் அருள் பாலிப்பதே இந்த கோயிலின் சிறப்பு. நள்ளிரவில் மட்டுமே கோயிலில் பூஜைகள் நடப்பது வியப்புக்குரிய ஒன்று. ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் கோயில் திருவிழா நடக்கிறது. இதில் ஆண்கள் மட்டுமே பங்கேற்று, கிடா வெட்டி சமபந்தி விருந்து நடத்துவதும் வேறு எங்கும் இல்லாத வினோதமாக கருதப்படுகிறது.

கோயில் வரலாறு

கோயிலுக்கு அருகிலுள்ள போதமலையில் இருந்து கர்ப்பிணியான மலைவாழ் பெண்  ஒருத்தி, கீழே வந்தாள். பணிகளை முடித்துக்கொண்டு மீண்டும் மலைக்கு செல்ல ஆயத்தமானபோது, அவளுக்கு கர்ப்ப வலி ஏற்பட்டு துடித்தாள். அந்த  காலக்கட்டத்தில் தீண்டாமை ஆழமாக வேரூரின்றி இருந்ததால் அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்க்க  யாரும் முன்வரவில்லை. வலியால் நீண்டநேரம் வாடித்துடித்தவளுக்கு இரட்டை குழந்தை (ஆண், பெண்) இறந்து பிறந்தது. அந்த சிசுக்களை ஓடையில் தூக்கி எறிந்த பெண், இந்த பகுதியில் மழையில்லாமல் விவசாயம் பொய்த்து போகும்.  யாருக்கும் குழந்தை பாக்கியமே இருக்காது, பிணியும், வறுமையும் தொற்றிக் கொள்ளும் என்று கண்ணீர் மல்க சாபமிட்டாள். பின்னர் அந்த இடத்திலேயே தனது உயிரையும் மாய்த்துக் கொண்டாள். அந்த அபலை பெண்ணின் சாபம் அப்படியே பலித்தது. இப்பகுதியில் வசித்தவர்கள், பெரும் துன்பங்களில் சிக்கி செய்வதறியாமல் தவித்தனர்.

இப்படிப்பட்ட சூழலில் கோயில் அருகே வசித்த ஒரு ஆணின் கனவில் தோன்றிய மலைவாழ் பெண்  ‘‘எனக்கு ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நள்ளிரவில்  பொங்கல் வைத்து வழிபாடு நடத்த வேண்டும். மலைவாழ் மக்களே முன்னின்று இதற்கான பூஜைகளை செய்ய வேண்டும். அதன் பின்னரே ஊர்மக்கள் வர வேண்டும். ஆனால் எனக்கு உதவிக்கு வராத பெண்கள் யாரும், அந்த நேரத்தில் இந்த கோயிலுக்குள் வரக்கூடாது. பூஜையில் பங்கேற்கும் அனைவரும் சமம்  என்பதை உணர்த்தும் வகையில், சமபந்தி விருந்து கொடுக்க வேண்டும். இதற்காக யாரிடமும் யாசகம் கேட்கக் கூடாது. கோயிலுக்கு நேர்ந்து விடும் ஆடுகளை பலியிட்டு அதனை விருந்தாக்கி பரிமாற வேண்டும். இப்படி செய்தால் மட்டுமே இந்த ஊரில் மழை பெய்யும், நோய் நொடி அகலும், குழந்தை பாக்கியத்துடன் வாழ முடியும்,’’ என்று கூறி மறைந்து விட்டாள்.

அதன்படியே நூற்றாண்டுகள் கடந்தும் பூஜைகள் நடக்கிறது. பொங்கலிட்டு மக்கள், அம்மனாக வழிபடுவதால்பொங்களாயி அம்மன்என்ற பெயரில் அம்மன் அருள்பாலிக்கிறார் என்பது கோயில் பூசாரி கூறும் தகவல். 

பக்தர்கள், பல்வேறு காரணங்களுக்காக அம்மனுக்கு நேர்த்திக்கடன் வைத்து வீட்டில் கிடா வளர்ப்பார்கள். இந்த கிடாக்கள் அனைத்தும் ஆடி மாதம் நடக்கும் திருவிழாவின் போது, கோயில் அமைந்துள்ள ஆலமரத்தடி வளாகத்திற்கு கொண்டு வரப்படும். அங்கேயே கிடாக்களை பலியிடும் பக்தர்கள் சாதி, மதம் பாராமல் அங்கேயே சமைத்து ஒருவருக்கொருவர் பரிமாறுகின்றனர். இந்த வைபவத்தில் ஒரு பெண்ணை கூட காணமுடியாது.

இந்த வகையில் நடப்பாண்டு பொங்களாயி அம்மன் சமபந்தி விருந்து வைபவம் வரும் ஆகஸ்ட் 4ம் தேதி நடக்கிறது,’’ என்கின்றனர் விழாக்குழுவினர்.