காஞ்சி அத்திவரதர் தரிசனத்தில் காவலில் நின்று கொண்டிருந்த ஆய்வாளரை, மாவட்ட ஆட்சியர் சகட்டு மேனிக்கு திட்டியுள்ள சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என்னடா பண்ணிகிட்டு இருக்க நீ? அத்திவரதர் முன்னிலையில் இன்ஸ்பெக்டரை சகட்டு மேனிக்கு பேசிய கலெக்டர்! வைரல் வீடியோ!

காஞ்சிபுரத்தில் அத்திவரதரின் தரிசனத்திற்காக மக்கள் அலை மோதுகிறது. வரும் வெள்ளிக்கிழமையுடன் அத்திவரதரின் தரிசனம் முடிவடைய உள்ளது. இதனால் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் லட்சக் கணக்கில் உயர்ந்து கொண்டே போகிறது.
நேற்று பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் தவறுதலாக வி.ஐ.பி வரிசையில் பொதுமக்களை அனுப்பி கொண்டிருந்தார். இதனால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் அறிந்தவுடனே அப்பகுதிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் விரைந்து வந்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த பிறகு மாவட்ட ஆட்சியர் நடந்ததை அறிந்தார். கடும் கோபமடைந்த அவர், தவறுக்கு காரணமான காவல்துறை ஆய்வாளரை கடுமையாக கண்டித்தார்.
ஆத்திரத்தை அடக்க முடியாத மாவட்ட ஆட்சியர் பொதுமக்களின் மத்தியில் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை ஆய்வாளர் என்றும் பாராமல் ஒருமையில் பேச தொடங்கினார். மேலும் பொதுமக்களின் மத்தியிலேயே "ராஸ்கல்" போன்ற கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தினார்.
அவரை சுற்றி நின்ற செய்தியாளர்கள் படம் பிடிப்பதை கூட கவனிக்காமல் ஆய்வாளரை ஆட்சியர் திட்டி கொண்டேயிருந்தார். இந்த சம்பவமானது அத்திவரதரை தரிசிப்பதற்கு காத்து கொண்டிருந்த பொதுமக்களிடையே முகச்சுளிப்பை ஏற்படுத்தியது. இதனால் நேற்றிரவு அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது