கொரோனா துயரம்! பசியில் பலியான நபர் சடலத்தை சைக்கிளில் எடுத்துச்சென்ற பரிதாபம்! எங்கு? ஏன் தெரியுமா?

ஊரடங்கினால் உணவு கிடைக்காமல் பசியால் உயிரிழந்தவரின் உடலை ஆர்வலர் ஒருவர் சைக்கிளில் எடுத்துச்சென்ற சம்பவமானது தெலங்கானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்தியா முழுவதிலும் 20,471 பேருக்கு இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 3,960 பேர் குணமடைந்து இருப்பதாகவும், 652 பேர் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நாடு முழுவதிலும் நோய் பரவலை தடுப்பதற்காக மே-3-ஆம் தேதி வரை கடுமையான ஊரடங்கு பின்பற்றப்பட்டு வருகிறது. தெலங்கானா மாநிலத்தில் ஊரடங்கு மே 7-ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படவுள்ளது. அன்றாட வாழ்வை இழந்த பலர் உணவு சாப்பிடுவதற்கு சிரமப்பட்டு வருகின்றனர்.

தெலங்கானா மாநிலத்தில் காமிரெட்டி என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் நாகராஜு வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் வேலை பார்த்து வந்தார். ஆனால் தற்போது ரயில்வே இயக்கப்படாத காரணத்தினால் வாழ்வாதாரம் பெரிதளவில் பாதித்தது. இவர் வசித்து வரும் பகுதியை சேர்ந்த மக்கள் கொடுக்கும் உணவை சாப்பிட்டு வந்தார்.

நேற்று சாலையோரத்தில் படுத்துக்கிடந்த அவர் பரிதாபமாக வந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், சடலத்தை ஆம்புலன்ஸ் மூலம் எடுத்து செல்ல ஏற்பாடுகள் செய்தனர். ஆனால் அவர்களுக்கு ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை.

பின்னர் தனியார் வாகனத்தின் மூலம் சடலத்தை எடுத்து செல்ல முயன்றனர். ஆனால் கொரோனா வைரஸ் தாக்குதல் அச்சத்தினால் அதுவும் கைகூடவில்லை. இறுதியாக ரயில் பெட்டிகளில் அனாதையாக கிடக்கும் சடலங்களை எடுத்துச்செல்லும் ராஜு என்பவரிடம் காவல்துறையினர் உதவி கேட்டனர்.

உடனடியாக அவர் நாகராஜுவின் சடலத்தை துணியால் சுத்தி, சைக்கிளில் எடுத்து சென்றார். இந்த துயர சம்பவத்தின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.