திருப்பூர் மாவட்டம், அவினாசி வட்டம் தத்தனூர் ஊராட்சி பகுதியில் தமிழக அரசின் சார்பில் சிப்காட் தொழில் பூங்கா அமைப்பதற்கு 889 ஏக்கர் விவசாய விளைநிலங்கள் கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதனால் பாதிக்கப்பட போகும் விவசாயிகள் சிப்காட் அமைப்பதற்கான முயற்சிகளை தமிழக அரசு கைவிட வேண்டுமென்று கொங்கு ஈஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
விவசாய நிலங்களை அழித்து சிப்காட் அமைக்கத்தான் வேண்டுமா..? கொங்கு ஈஸ்வரன் போர்க்கொடி

ஏற்கனவே தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சிப்காட்டை சுற்றியுள்ள மக்கள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக பெருந்துறையில் அமைந்துள்ள சிப்காட்டை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் பெருமளவு மாசடைந்திருப்பது மட்டுமல்லாமல் அந்த நீரை பயன்படுத்தும் மக்களுக்கு புற்றுநோய், மலட்டுத்தன்மை மற்றும் பல்வேறு தோல் நோய்களால் அவதிப்பட்டு வருகிறார்கள். சிப்காட்டில் அப்பகுதி மக்கள் யாரும் வேலைக்கு செல்வது கிடையாது. வட இந்தியர்கள் தான் சிப்காட்டில் அதிகம் வேலை செய்பவர்களாக இருக்கிறார்கள். அதனாலும் அப்பகுதி மக்கள் பாதிப்படைகிறார்கள்.
சிப்காட் ஆரம்பிக்கும் போது அப்பகுதி மக்களுக்கு கொடுக்கப்படும் உத்தரவாதம் ஆரம்பித்த பிறகு காற்றில் பறக்க விடப்படுகிறது. சிப்காட்டில் இயங்கும் தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க தமிழக அரசு இதுவரை முன்வரவில்லை. சுத்திகரிப்பு ஆலைகளும் சரிவர இயங்குவது கிடையாது.
தவறு செய்யும் தொழிற்சாலைகள் மீது எந்தவொரு நடவடிக்கையும் கடுமையாக எடுக்காமல் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் செயலற்று கிடக்கிறது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் மாசடைந்திருப்பதாக நீதிமன்றமே கூறியிருக்கிறது. மாசடைந்திருக்கின்ற மாசு கட்டுப்பாட்டு வாரியம் தன்னுடைய செயல்பாட்டை மாற்றும் வரை விளைநிலங்களில் சிப்காட் அமைப்பதை மக்கள் ஏற்கமாட்டார்கள்.
சிப்காட்டினால் ஏற்படும் பாதிப்புகளை பார்த்துக்கொண்டிருக்கும் மக்கள் தங்கள் பகுதிகளில் புதிதாக சிப்காட் அமைப்பதற்கு ஒரு போதும் ஒத்துக்கொள்ளமாட்டார்கள். 60 ஆண்டுகளாக போராடி அவினாசி அத்திக்கடவு திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தும் நிலையில் அவினாசி பகுதியில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதற்கு முன்பாகவே சிப்காட் அமைக்கிறோம் என்று நிலம் கையகப்படுத்த முயற்சிப்பது கடும் கண்டனத்திற்குரியது.
அவினாசி அத்திக்கடவு திட்டம் செயல்படுத்துவதே சிப்காட்டில் இயங்க போகும் தொழிற்சாலைகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்காகவா என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்திருக்கிறது. தமிழக அரசின் சிப்காட் அறிவிப்பால் தத்தனூர் ஊராட்சியை சுற்றியுள்ள நான்கைந்து ஊராட்சிகளில் புதிதாக வீடுகளை கட்டுவதற்கும், நிலங்களை விற்பனை செய்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.
விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டிருக்கும் அவினாசி பகுதி மக்களின் எதிர்ப்புக்குரலுக்கு தமிழக அரசு செவிசாய்க்க வேண்டும். அவினாசி வட்டம் தத்தனூர் ஊராட்சி பகுதியில் சிப்காட் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டுமென்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக கேட்டுக்கொண்டுள்ளார்.