சமீபத்தில் நடந்துமுடிந்த பொதுக்குழு விவகாரத்தில், பெரும் அதிருப்தியில் இருக்கிறார் கனிமொழி. ஏனென்றால், அவரும் ஒரு பொறுப்பை எதிர்பார்த்து ஏமாந்து போயிருக்கிறார்.
அழகிரி வகித்த தென்மண்டல பொறுப்பாளர் பதவியை பிடிக்கிறாரா கனிமொழி..?

துரைமுருகன் பொதுச் செயலாளராகவும், டி.ஆர் பாலு பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது புத்திசாலித்தனமான காரியம் இல்லை என்பதுதான் பலருடைய கருத்தாக இருக்கிறது.
அதாவது தலைவர் ஸ்டாலின் 70 வயதை நெருங்கும் நிலையில் அதற்கடுத்த பொறுப்புகளில் 80ஐ தாண்டியவர்களையா நியமிப்பது? துடிப்பான இளைஞர்களே கட்சியில் இல்லையா என்ற கேள்வியைத்தான் எழுப்புகிறது.
அதேபோன்று ’திமுகவின் அதிகாரமிக்க பதவிகளில் ஒரு முஸ்லீம் கூட இல்லையே!’ என அந்த சமூகம் கொந்தளித்துக் கிடக்க இப்போது இதே மாதிரியான கோபம், நாடார் இன மக்கள் மத்தியிலும் ஏற்பட்டிருக்கிறது. தென் மாவட்டங்களில் மிகக் கணிசமாக இருக்கும் அந்த சமூக இளைஞர்கள் இது தொடர்பான தங்களது கோபத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், திமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினரான கிள்ளை ரவிச்சந்திரன் என்பவர் ஒருபடி மேலே போய் கனிமொழியை தென் மண்டல அமைப்புச் செயலாளராக நியமிக்க வேண்டும் என பகிரங்கமாகவே கோரிக்கை விடுத்திருக்கிறார். கருணாநிதி இருந்தபோது இந்த பதவியில் இருந்துதான் அதிரடி காட்டினார் மு.க அழகிரி. ஒருசில நாடார் அமைப்புகளும் கனிமொழிக்கு கட்சியில் நிர்வாக ரீதியிலான பதவி அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.
உச்சகட்டமாக கட்சிக்குள் அமைப்பு ரீதியிலான பொறுப்பு தமக்கு தரப்பட வேண்டும் என்பதில் கனிமொழியும் ஆர்வம் காட்டுகிறாராம். மகளிரணி அமைப்பாளர் என்கிற டம்மி பதவியில் இனியும் தொடர்வதற்கு அவருக்கு விருப்பமில்லையாம். இது தொடர்பாக பல்வேறு தரப்பினர் மூலம் ஸ்டாலினுக்கு அவர் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்திருப்பதாகவும் கூறுகிறார்கள்.
அழகிரி வகித்த பதவியை பெற்றே தீர்வது என்று களம் இறங்கியிருக்கும் கனிமொழியைக் கண்டு தி.மு.க.வினரே ஆடிப்போய் கிடக்கிறார்கள்.