மார்கழியை பீடை மாதம் என்று பழிப்பது உண்மையா?

வருடத்தின் அனைத்து நாட்களையும் சுபநாட்கள் என்று சொல்ல முடியாது. எந்த நாளில் சுபக்கிரகங்கள் நல்ல நிலையில் இருக்கிறதோ அந்த நாளை சுபநாள் என்று சொல்கிறோம்.


சுபநாள் என்று வருகின்றபோது அது மனிதர்களின் தனிப்பட்ட வாழ்வில் நடத்துவதற்குரிய நிகழ்வுகளுக்காகவும், சமுதாயத்தில் அனைவரும் கூடி விழாவாக கொண்டாடுவதற்காகவும் சில சுபநாட்கள் இருக்கின்றது. மனிதர்களுக்கு என்று தனியாக இருப்பது போல தெய்வங்களை நினைத்து நன்றி கடன் செலுத்தவும், பிரார்த்தனைகள் வைக்கவும் என்றே சில நாட்கள் இருக்கின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த மாதம்தான் மார்கழி மாதம்.

'மார்கழி' என்னும் பெயருக்கு என்ன பொருள்? 'மாரி' என்ற வார்த்தையிலிருந்து உண்டானது 'மார்' என்பது. 'மாரி' என்றால் மழை என்று பொருள். 'கழி' என்றால் 'கழிந்த' அல்லது 'பின்னர்' என்று அர்த்தம். எனவே, மழைகாலம் முடிந்த பின்னர் ஆரம்பிக்கும் மாதம் என்று பொருள்.

மார்கழி மாதத்திற்கு சூன்ய மாதம் என்ற பெயரும் உண்டு சூன்யம் என்றால், ஒன்றுமில்லாதது எனப் பொருள். நம் வாழ்க்கை ஒன்றுமில்லாதது, நிலையற்றது. இந்த வாழ்வை அர்த்தமுள்ளதாக்கி கொள்ள வேண்டுமானால், சரணாகதி எனும் உயர் தத்துவத்தை கடைபிடிக்க வேண்டும்.

மார்கழி மாதம் பீடை மாதம் என்பதெல்லாம் கிடையாது. அது தனுர் மாதம். பீடை என்று சொல்லக்கூடாது. ஏனென்றால் ஆரோக்கியத்திற்கு உரிய மாதம் மார்கழி மாதம். தட்சணாயணம் மார்கழி மாதத்துடன் முடிகிறது. அதாவது, சூரியனுடைய தென் பகுதி இயக்கம் இந்த மாதத்துடன் முடிகிறது. இந்த மாதத்தில் அதிகாலையில் எழுந்து இறைவனை வணங்குவதால், நாடி நரம்புகள் வலுவடைகிறது. நீண்ட ஆயுள் கிடைக்கிறது. அதனால்தான் இந்த மாதத்தை இப்படி ஒதுக்கி வைத்தார்கள்.

இம்மாதத்தில் அதிகாலைப்பொழுதில் தியானம், யோகா, தெய்வீகம், ஆன்மிகம் என்று இருந்தால் சாதகமான வைப்ரேஷனைக் கொடுக்கும். எனவே இம்மாதம் கெடுதலான மாதம் கிடையாது. மாதங்களிலே மிகவும் மகத்துவம் மிக்கது மார்கழி மாதம்தான். பீடை மாதம் என்பதன் அர்த்தத்தை பலர் தவறாக புரிந்துகொண்டுள்ளனர். பீடுடைய மாதம் என்பதே நாளடைவில் மருவி பீடை மாதம் என்றாகிவிட்டது.

பீடுடைய என்றால் செல்வம் பொருந்திய, சிறப்புக்கள் நிரம்பியது என்று அர்த்தம். 'மாதங்களில் நான் மார்கழி" என்று கீதையில் கிருஷ்ண பரமாத்மாவே கூறியிருக்கிறார் என்றால் அதன் சிறப்பை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். மார்கழி மாதம் என்பது தேவர்களது ஒரு நாளின் விடியற்காலை பொழுதாகும். விடியற்காலை என்றாலே மங்கலகரமானது தானே? எனவே இந்த பெருமை பொருந்திய மாதம் முழுவதும் இறைவழிபாட்டுக்கு என்றே பெரியோர்கள் ஒதுக்கி வைத்துள்ளனர்.

இம்மாதங்களில், சுபநிகழ்ச்சி நடத்தினால், வழிபாடு பாதிக்கும் என்பதாலேயே, இம்மாதங்களில் அவற்றை நடத்தாமல் தவிர்த்தனர். மார்கழி மாதத்தை, மார்கசீர்ஷம் என்று வட மொழியில் சொல்வர். மார்கம் என்றால் - வழி, சீர்ஷம் என்றால் - உயர்ந்த, வழிகளுக்குள் தலைசிறந்தது என்பது பொருள். இறைவனை அடையும் வழிக்கு இது உகந்த மாதமாக உள்ளது.