குடிபோதையில் மனைவியின் முகத்தை தலையணையை வைத்து அமுக்கி கணவன் கொலை செய்துள்ள சம்பவமானது காட்டுமன்னார்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போதையில் மனைவி முகத்தில் தலையணை வைத்து அமுக்கிய கணவர் - அடுத்த ந்டந்த திகில் சம்பவம்

கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோவில் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதிக்கு அருகே மாளிகமடம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய வயது 35. சேத்தியாத்தோப்பு பகுதிக்கு அருகே உள்ள கந்தகுமாரம் பகுதியை சேர்ந்தவர் அமலா. இவருடைய வயது 27. இவருக்கு 1 1/2 ஆண்டுகளுக்கு முன்னர் சுரேஷுடன் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு 6 மாத குழந்தையுள்ளது குறிப்பிடத்தக்கது.
சுரேஷுக்கு மதுப்பழக்கம் உள்ளதை திருமணத்திற்கு பிறகு அமலா கண்டுபிடித்துள்ளார். இருவருக்குமிடையே அவ்வப்போது பலத்த சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு வந்துள்ளன. தினமும் மது அருந்திவிட்டு மனைவியை சுரேஷ் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். தன் வாழ்க்கை சீரழிந்து கொண்டிருப்பதை கண்டு அமலா மிகவும் வருத்தப்பட்டு கொண்டிருந்தார்.
நேற்று இரவு சுரேஷ் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது இருவருக்குமிடையே பலத்த சண்டை ஏற்பட்டுள்ளது. போதை தலைக்கேறியதால் நிதானத்தை இழந்த சுரேஷ் தன் மனைவியின் முகத்தில் தலையணையை வைத்து மூச்சுமுட்ட கொலை செய்துள்ளார். பின்னர் சுரேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
மறுநாள் காலையில் நெடுநேரமாகியும் அமலா வீட்டை விட்டு வெளியே வரவில்லை. சந்தேகத்தின் பெயரில் அமலாவின் வீட்டிற்குள் நுழைந்து பார்த்த அக்கம்பக்கத்தினர் அமலா சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர், காட்டுமன்னார்கோயில் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அமலாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் சுரேஷ் மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக சரணடைந்துவிட்டார். இந்த சம்பவமானது காட்டுமன்னார்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.