ஹோலி கொண்டாட்டத்தில் விபரீதம்! உயிருக்குப் போராடிய சிறுவன்! பாய்ந்து சென்று காப்பாற்றிய நிரூபர்!

சென்னை: ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் தண்ணீரில் விழுந்து உயிருக்குப் போராடிய சிறுவனை, புகைப்பட நிருபர் காப்பாற்றியுள்ளார்.


ஹோலி பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை வேப்பேரி அருகே ஹோலி பண்டிகை களைகட்டியிருந்தது.

இதையொட்டி, தண்ணீர் தொட்டி நிறுவப்பட்டு, அதில், நீர் ஊற்றி, கலர் கலந்து பொதுமக்கள் மீது ஊற்றி, பலர் கொண்டாடி வந்தனர். ஆனால், சிறுவன் ஒருவன் திடீரென அந்த தொட்டிக்குள் விழுந்து,உயிருக்குப் போராடினான்.

உடனடியாக, அவனை அருகில் இருந்தவர்கள் மீட்டுவிட்டாலும், என்ன முதலுதவி அளிப்பது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. இந்நிலையில், அங்கு புகைப்படம் எடுக்க வந்த ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன புகைப்பட நிருபர், உடனடியாக, களத்தில் இறங்கி, முதலுதவி செய்து, அந்த சிறுவனை காப்பாற்றினார்.

செய்தி எடுப்பதோடு போகாமல், களத்தில் முன்னுதாரணமாகச் செயல்பட்டு சிறுவனின் உயிரை காப்பாற்றிய, அவரை பலரும் பாராட்டி வருகின்றனர். வழக்கமாக இது போன்ற சமயங்களில் புகைப்பட கலைஞர்கள் புகைப்படம் எடுக்க தான் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் சென்னையில் விதி விலக்காக மாணவனை செய்தியாளர் காப்பாற்றியுள்ளார்.