ஸ்டாலின் மருமகனை விரட்டியனுப்பிய டெல்லி பி.ஜே.பி.

டெல்லியில் ராஜதந்திர முயற்சிகள் மேற்கொண்டு, கனிமொழியை மட்டம்தட்ட நினைத்த ஸ்டாலினின் மருமகன் சபரீஷன் மூக்கறுபட்டு திரும்பியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. ஸ்டாலினுக்கு மருமகன் என்றால், எங்களுக்கு என்னாச்சு என்று டெல்லி பி.ஜே.பி. பிரமுகர்கள் விரட்டியே அனுப்பினார்களாம்.


கருணாநிதிக்குப் பிறகு தி.மு.க. என்றால் ஸ்டாலின் மட்டும்தான் என்றாகிப்போனது. முந்தைய காலத்தில் கருணாநிதிக்கு எல்லாமுமாக மாறன் இருந்ததுபோன்று, இப்போது ஸ்டாலினுக்கு அரசியல் ஆலோசகராக செயல்படுகிறார் சபரீசன். அதற்காக எடுத்த ஒரு சாணக்கிய  முயற்சியில்தான் மூக்கறுபட்டு திரும்பியிருப்பதாக சொல்கிறார்கள்

தமிழகத்தைவிட, டெல்லியை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வது,  தன் எதிர்காலத்துக்கு நல்லது என்ற முடிவுக்கு வந்தார் சபரீசன். இப்போது கனிமொழிதான் டெல்லி விவகாரங்களைக் கவனித்துக்கொள்கிறார். கனிமொழியை  மாநில அரசியலுக்குத் திருப்பிவிட்டால், பத்தோடு பதினொன்றாக மாறிவிடுவார். அவரை டம்மி ஆக்கிவிட்டு, டெல்லியை தன்னுடைய முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்க திட்டம் போட்டார். ராஜ்யசபா எம்.பி. பதவி பெற்று, அமைச்சராகும் கனவும் சபரீசனுக்கு  உள்ளது. இதற்காக டெல்லியில் போய் முக்கிய தலைவர்களை எல்லாம் சந்தித்துப் பேசுவதற்கு மருமகன் ஆசைப்பட, ஆசி கூறி அனுப்பிவைத்தார் ஸ்டாலின்.

டெல்லியில் 10 நாட்களுக்கும் மேலாக முகாமிட்ட  சபரீசன், ஒரு சில காங்கிரஸ் தலைவர்களையும், பிற கட்சியினரையும் சந்தித்து , இனி தமிழகம் குறித்த சமாச்சாரங்களுக்கு,  என்னை தொடர்புகொண்டால் மட்டும் போதும் என்று அழுத்திக் கேட்டுக்கொண்டாராம். எல்லோரும் தலையாட்டியதோடு சரி, சபரீசன் வருகையை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லையாம்.

அடுத்த கட்டமாக டெல்லியில் இருக்கும் பி.ஜே.பி. தலைவர்கள் வீட்டுக்குப் படையெடுத்திருக்கிறார். மரியாதை நிமித்தமாக சந்திப்பு என்பதைக் கடந்து ராஜதந்திரம் போன்று அரசியல் பேசத் தொடங்கினாராம். குறிப்பாக ரஜினியின் நம்பிக்கைக்குரிய டெல்லி அமைச்சர் ஒருவரை சந்தித்தாராம்.

தமிழகத்தில் பி.ஜே.பியுடன் கூட்டணி இல்லை என்று மீண்டும் மீண்டும் ஸ்டாலின் தெளிவாகப் பேசும் நிலையில் எதற்காக வந்திருக்கிறீர்கள் என்று அமைச்சர் வெளிப்படையாக கேட்டிருக்கிறார்.

நாங்கள் இன்றைய சூழலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு சேர்ந்து போட்டியிட்டால் மட்டும்தான் தமிழகத்தில் வெற்றி பெற முடியும். அதனால்தான் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்படுகிறோம். ஆனால், டெல்லியில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சியமைக்கவே அதிக வாய்ப்பு இருக்கும் என்று நம்புகிறோம். அதனால்தான், ராகுல் காந்தியை இன்னமும் நாங்கள் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவில்லை. தமிழகத்தில் நாங்கள் வெற்றி பெற்றதும் கண்டிப்பாக பா.ஜ.க.வுக்கு ஆதரவு கொடுப்போம். அப்போது எங்களுக்கு மந்திரி சபையில் இடம் கொடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டாராம்.

அதாவது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தாலும், பா.ஜ.க. ஆட்சி அமைத்தாலும் தி.மு.க.வுக்கு நிச்சயம் மந்திரி பதவி வேண்டும் என்பதுதான் சபரீசனின் ராஜதந்திரமாம்.

ஆனால், இதனை புரிந்துகொண்ட மத்திய அமைச்சர் கண் சிவந்துவிட்டாராம். பதவி நாடகம் போடுவதற்கு இது நேரமும் அல்ல, இடமும் அல்ல, இப்படியொரு எண்ணத்துடன் இனி இந்தப் பக்கம் எட்டிப் பார்க்க வேண்டாம் என்று கடுப்படித்து விரட்டி விட்டாராம். 

அதனால்தான் சபரீசன் அமைதியாக ரிடர்ன் ஆகிவிட்டாராம்.