தேனியில் புதிய அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி… அடிக்கல் நாட்டிய எடப்பாடி பழனிசாமி.

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 20.3.2020 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், தேனி மாவட்டத்தில் ஒரு புதிய கால்நடை மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்று அறிவித்தார்கள்.


அதன்படி, தேனி மாவட்டம், தேனி வட்டம், வீரபாண்டி கிராமத்தில் 253.64 ஏக்கர் நிலப்பரப்பில் 265 கோடியே 87 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்கள். 

புதிதாக அமையவுள்ள இக்கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையமானது மதுரை, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள கால்நடைகளுக்கான மருத்துவத் தேவைகளை பூர்த்தி செய்யும். இக்கல்லூரி மாநில எல்லையில் அமைந்துள்ளதால், பால், இறைச்சி மற்றும் கால்நடை உற்பத்திப் பொருட்களை பதப்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்துதலுக்கும் பெரும் வாய்ப்பாக அமையும் என்று தெரிவித்தார்.