தமிழகத்தின் எல்லா மாவட்ட மக்களுக்கும் 1,000 ரூபாய் கிடையாதா..?

தமிழகத்தின் அனைத்து மாவட்ட மக்களுக்கும் ரூ.1000 நிவாரண நிதி வழங்கவேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வி.எம்.எஸ்.முஸ்தபா கோரிக்கை வைத்துள்ளார்.


முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் நிவாரணம் நேற்றுமுதல் வழங்கப்படுகிறது. சென்னை உள்பட 4 மாவட்டங்களில் கொரோனாவை கட்டுப்படுத்த கடந்த 19ம் தேதி முதல் வருகிற 30ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அத்தியாவசிய தேவைகளுக்கு தவிர மற்றவர்கள் வெளியே வரத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த பகுதிகளில் வசிக்கும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 1000 ரூபாய் நிவாரண தொகை வீடு தேடி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி, ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வீடுகளுக்கே சென்று நேரடியாக வழங்குகின்றனர்.

நோய் பரவலை தடுக்கும் வகையில் தற்போது வீடு வீடாக சென்று 1000 ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், அரசின் இந்தஉத்தரவை ரேஷன்கடை ஊழியர்கள் பின்பற்றவில்லை, மாறாக ரேஷன்கடைகளை பூட்டி விட்டு வெளியில் மேஜை, சேர் போட்டு அமர்ந்து கொண்டு அங்கு வரும் குடும்பஅட்டைதாரர்களுக்கே நிவாரண பணத்தை வழங்கி வருகின்றனர்.

எதற்காக சென்னை உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டத்தே, அந்த நோக்கத்தை தவிர்க்கும் வகையில் ரேஷன் கடைகளில் கூட்டமாக கூட்டமாக சமூக விலகல் இல்லாமல் நிவாரண பணத்தை ரேஷன் ஊழியர்கள் வழங்கி வருகின்றனர்.

வீடு வீடாக சென்று நிவாரணபணம் வழங்கப்படும் என கூறி அரசின்உத்தரவை காற்றில் பறக்க விட்டு, இதுபோன்று அலட்சியத்துடன் செயல்படும் ரேஷன் கடை ஊழியர்கள் மீது தமிழகஅரசு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

கொரோனா ஊரடங்கால் அனைத்த தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மதுரை உள்ளிட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட மக்களுக்கு வழங்கப்படும் ரூ.1000 நிவாரணநிதி போன்று தமிழகத்தின் பிற மாவட்ட குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 நிவாரண நிதி வழங்க வேண்டுமென அரசை தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.