உயிருக்கு போராடிய கன்றுக்குட்டி..! காப்பாற்ற துடியாய் துடித்த தாய்ப்பசு! நடுரோட்டில் பாசப்போராட்டம்!

கன்றுக்குட்டி அடிப்பட்டதை தாங்கிக்கொள்ள இயலாத தாய்ப்பசு தவித்த காட்சிகள் காரைக்குடி மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.


காரைக்குடி மாவட்டத்தில் பிரதான சாலைகளில் ஒன்று முடியரசனார் சாலை. இந்த சாலையில் ஒரு பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவுக்கு அருகே ஒரு கன்றுக்குட்டியும், தாய்ப்பசுவும் நின்று கொண்டிருந்தன. அப்போது அவ்வழியே வந்த வாகனம் கன்றுக்குட்டியின் மீது மோதிவிட்டு கண்டுகொள்ளாமல் சென்றுள்ளது. 

காலில் பலத்த காயம் அடைந்த கன்றுகுட்டி தரையில் சாய்ந்தது. எழ முடியாமல் தவித்து வந்த கன்றுக்குட்டியை சுற்றிசுற்றி தாய்ப்பசு வலம் வந்து கொண்டிருந்தது. அப்போது அவ்வழியே "அக்னி சிறகுகள்" என்ற பொதுநல அமைப்பின் செயலாளரான கிருஷ்ணகுமார் தன்னுடைய குழுவினருடன் சென்று கொண்டிருந்தார். 

இதனை பார்த்து பரிதவித்த கிருஷ்ணகுமார், கன்று குட்டியை கால்நடை மருத்துவமனை வரை அழைத்து சென்றுள்ளார். அவர்களுக்கு பின்னாலேயே தாய்ப்பசு கால்நடை மருத்துவமனை வரை வந்துள்ளது. இந்த சம்பவமானது அங்கிருந்த பொதுமக்களை நெகிழ வைத்துள்ளது.

காரைக்குடியில் பல சாலையோரங்களில் கால்நடைகள் நடந்து கொண்டிருப்பதும், படுத்து கொண்டிருப்பதும் சகஜமாகி வருகிறது. இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். அப்போது ஏற்படும் விபத்துகளினால் கால்நடைகளும் பாதிப்படைகின்றன. ஆகையால் அரசு அதிகாரிகள் இதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த சம்பவமானது காண்போர் நெஞ்சை உருக வைத்தது.