பொள்ளாச்சி பாலியல் பயங்கரத்தில் உண்மை குற்றவாளிகளைப் பிடிக்க வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்என்று டி.டி.வி. தினகரன் இன்று குரல் எழுப்பியிருக்கிறார்.
பொள்ளாச்சி கொடூரம்! பிரபலங்களின் அரசியல் வாரிசுகளுக்கு தொடர்பு! சற்றுமுன் வெளியான அதிர்ச்சி தகவல்!

மேலும் அவர், ‘’தமிழகத்தையே உறைய வைத்திருக்கும் பொள்ளாச்சி பாலியல் பயங்கரத்தில் அரசியல் வாரிசுகளுக்குத் தொடர்பு இல்லை என அவசர, அவசரமாக காவல்துறை கண்காணிப்பாளர் மறுத்திருப்பது சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தி உள்ளது. நூற்றுக்கணக்கான பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுவதால் வழக்கை உடனடியாக சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்.
சமூக வலைதளம் மூலம் மாணவிகள், இளம்பெண்கள், குடும்பத்தலைவிகள் ஆகியோரை வளைத்து பாலியல் ரீதியாக வக்கிரமாக கொடுமைப்படுத்தியதில் 4 பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதுவும் பல்வேறு தரப்பில் இருந்து எழுந்த அழுத்தங்களுக்குப் பிறகே காவல்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இதன் பின்னணியில் ஆட்சி அதிகாரத்தில் மிக முக்கிய மையமாக இருக்கக்கூடிய இருவர் மீது குற்றச்சாட்டுகள் பலமாக எழுந்தன. அது உண்மைதானோ எனக் கருதும் வகையில் பொள்ளாச்சியின் அ.தி.மு.கவைச் சேர்ந்த பார் நாகராஜ், அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கும் மேலே உயர்நிலையில் உள்ள முக்கியப்புள்ளிகளின் உறவுகளைக் காப்பாற்றவே இந்த கண்துடைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நெஞ்சை உலுக்கும் இந்தப் பாலியல் கொடூரத்தில் அடுத்தடுத்து புதுப்புது அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கும் நேரத்தில் கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.பாண்டியராஜன் நேற்று கொடுத்திருக்கும் பேட்டி இன்னும் சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது. அதாவது, ‘இதில் 100% அரசியல் வாரிசுகளுக்குத் தொடர்பில்லை’ என்று கோவை எஸ்.பி. திட்டவட்டமாக கூறியது எப்படி? அதற்குள் முழுவதுமாக விசாரித்து முடித்துவிட்டார்களா?
நூற்றுக்கணக்கான பெண்கள் வக்கிர மிருகங்களால் சூறையாடப்பட்டிருக்கும் வழக்கைச் சாதாரண வழக்காக்கி ஊற்றி மூடுவதற்கான முயற்சியா? யாருடைய தூண்டுதலின் பேரில், யாரைக் காப்பாற்ற காவல் துறை இதைச்செய்கிறது ? என்று அடுக்கடுக்கான கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன.
இன்னும் ஒரு படி மேலே போய், ‘பாதிக்கப்பட்ட பெண்கள் முன் வந்து புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் கோவை எஸ்.பி கூறியிருக்கிறார். ஏற்கனவே புகார் கொடுத்த பெண்ணின் பெயரை வெளியிட்டதால், அவரது உறவினர்கள் தாக்குதலுக்கு ஆளாகி இருப்பதாக செய்திகள் வந்திருக்கின்றன. இதன்பின்னர் எந்த நம்பிக்கையில் காவல்துறையிடம் வந்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுப்பார்கள்? இதற்கெல்லாம் விடை சொல்ல வேண்டிய பொறுப்பு ஆட்சியாளர்களுக்கு இருக்கிறது.
இவ்வளவுக்குப் பிறகு மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சி.பி.சி.ஐ.டி மட்டும் எப்படி இதனை நியாயமாக விசாரித்திடும் என்று நம்ப முடியும்? எனவே பொள்ளாச்சி பாலியல் பயங்கர வழக்கை உடனடியாக சி.பி.ஐ வசம் ஒப்படைக்க வேண்டும். முதுகெலும்பற்ற பழனிச்சாமி அரசு அதனைச் செய்யத் தவறினால், உயர்நீதிமன்றம் நேரடியாக தலையிட்டு, தன்னிச்சையாக இந்த விவகாரத்தைக் கையிலெடுத்து, நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணையை நடத்த உத்தரவிடவேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் குண்டர்களிடம் இருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும். அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் வலியுறுத்தும் என்கிறார் தினகரன்.
மடியில் கனம் இல்லை என்று மாநில அரசு காட்ட வேண்டிய நேரம் இது.