கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தன்னுடைய கிராம மக்களை காப்பாற்றுவதற்காக கிராம தலைவர் செய்துவரும் செயல் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
தீவிரமாக பரவும் கொரோனா..! ஒரு கிராமத்திற்கே எல்லைச்சாமியாக மாறிய இளம் பெண் பட்டதாரி! ஏன்? எதற்கு? எப்படி தெரியுமா?

கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 33,500-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 7,20,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனால் இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த 23ம் தேதி இரவன்று அறிவித்தார். சமூக விலகல் தான் இந்த நோய் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்கான ஒரே வழி என்பதை அவர் அறிவுறுத்தி வருகிறார். இந்நிலையில் நாட்டின் பல்வேறு இடங்களிலும் மக்கள் இந்த சமூக இடைவெளியை சரிவர பின்பற்றாமலிருப்பதாக கூறப்படுகிறது.
இத்தகைய சூழலுக்கு மத்தியில் தெலங்கானாவில் அமைந்துள்ள ஒரு கிராமத்தின் தலைவர் செய்யும் செயல்கள் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகின்றன. நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள மதனபுரம் கிராமத்தின் தலைவராக அகிலா என்ற 23 வயது பட்டதாரி பணியாற்றி வருகிறார்.
இவர் இந்த கிராமத்திலிருந்து எவரும் வெளியே செல்ல முடியாத வகையில் எல்லையில் காவலாக இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், "இந்த ஊர் எல்லையிலிருந்து யாரையும் வெளியே அனுப்பாமலும், வெளியாட்களை உள்ளே நுழைய விடாமலும் பாதுகாத்து வருகிறோம். ஊர் மக்கள் வெளியே செல்வதற்கான காரணத்தை அறிந்து தேவையிருந்தால் மட்டுமே மக்களை வெளியே அனுப்புகிறோம்.
இந்த கிராமத்தில் மொத்தம் 1600 பேர் வசித்து வருகிறோம். யாரேனும் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதித்துவிடும் என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட்டு வருகிறோம். முகக்கவசம் அணிவதற்கான தேவைகள் குறித்து கிராம மக்கள் அனைவரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம்" என்று கூறுகிறார்.
தன்னுடைய கிராமத்திற்கு அகிலா ஒரு எல்லைச்சாமி ஆகவே திகழ்ந்து வருகிறார் என்று கூறினால் அது மிகையாகாது.