11 வயதுச் சிறுமியுடன் ஒரு வருடமாக பாலியல் வல்லுறவு! 1000 சகோதரிகளின் சகோதரன் கைது!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் வெகுஜன ராக்கி கட்டும் நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் ஆயிரம் சகோதரிகளின் சகோதரன் என தன்னை அழைத்துக்கொள்ளும் கயவன் ஒருவன் 11 வயது சிறுமியை ஓராண்டு வரை பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் அம்பலமானதை அடுத்து போலீசார் அவனை கைது செய்துள்ளனர்.


மத்திய பிரதேச மாநிலம் பெட்டல் கஞ்ச் என்ற இடத்தைச் சேர்ந்தவன் ராஜேந்திர சிங் என்ற கெந்து பாபா. இவன் ஒரு பசுத்தோல் போர்த்திய ஓநாய் என்பது கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் காவல் நிலையத்துக்கு வந்த மொட்டைக் கடிதத்தால் வெளிப்பட்டது. அந்த மொட்டைக் கடிதத்தில் அவன் 11 வயதுச் சிறுமி ஒருத்தியை ஓராண்டாக பாலியல் பலாத்காரம் செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

பாதிக்கப்பட்ட சிறுமியிடமும், அவளது குடும்பத்தினரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது மொட்டைக்கடிதத்தில் இருந்தது உண்மை எனத் தெரிய வந்தது. தன்னை அவலத்துக்கு ஆளாக்கிய கேடுகேட்டவன் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பாதிக்கப்பட்ட சிறுமி வலியுறுத்திக் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். 

விசாரணை மற்றும் புலனாய்வு நடவடிக்கைகளின் அடிப்படையில் ராஜேந்திர சிங்குக்கு எதிரான உறுதியான ஆதாரங்களைத் திரட்டிய போலீசார் அவனுக்கு நோட்டீஸ் அனுப்பினர். இதையடுத்து கடந்த ஞாயிற்றுக் கிழமை காவல் நிலையத்தில் சரண்டைந்த ராஜேந்திர சிங்கை போலீசார் கைது செய்தனர். 

ராக்கி நிகழ்ச்சிகள் நடத்தி ஆயிரம் பெண்களை ராக்கி கட்ட வைத்து தான் அவர்களின் சகோதரன் என்று விளம்பரம் செய்து கொண்டே 11 வயது சிறுமியுடன் பாலியல் உறவு வைத்திருந்த இவன் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறியுள்ளனர்.