5 லட்சம் பரிசுனு சொன்னாங்க! பத்து பைசா வரல! ஜீ தமிழ் டிவி மீது சரிகமப ரமணியம்மாள் கண்ணீர் புகார்!

ஜீ தமிழ் நிகழ்ச்சியில் சரிகமப நிகழ்ச்சியில் பங்கேற்று இரண்டாம் இடம் பிடித்த ரமணியம்மாள் தனக்கு பரிசுத் தொகையில் பத்து பைசா கூட கைக்கு வரவில்லை என்று கண்ணீருடன் பேட்டி அளித்துள்ளார்.


ஜீ தமிழ் சேனலில், சரிகமப என்ற பெயரில், மியூசிக் ரியாலிட்டி ஷோ நடைபெற்று வருகிறது. இது உலக தமிழர்களின் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாகும். இதில், 63 வயதான ரமணியம்மாள் என்ற மூதாட்டி, கடந்த ஆண்டில் பங்கேற்று, தனது கணீர் குரலில் பாடல்கள் பாடி ரசிகர்களை அசத்தினார்.

அத்துடன், சரிகமப நிகழ்ச்சியின் இறுதி வரை முன்னேறி, கடந்த ஆண்டில், 2வது இடம் பிடித்தார். அவரது திறமையை பாராட்டி, ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசும், ஐந்து செண்ட் விவசாய நிலமும் வழங்குவதாக, ஜீ தமிழ் தொலைக்காட்சி அறிவித்தது. இது தவிர, ஜூங்கா 2, சண்டகோழி 2 போன்ற படங்களில், குறிப்பிடும்படியான பாடல்களை பாடி, சினிமா உலகிலும் ரமணியம்மாள் காலடி எடுத்து வைத்துள்ளார்.

எனினும், தனக்கு அறிவிக்கப்பட்ட பரிசு இதுவரை கிடைக்கவில்லை எனக் கூறி, புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.  ஆம். இதுபற்றி வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த ரமணியம்மாள், ''இறைவனின் அருளால் இந்த வயதில்  எனக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. பலர் என் குரலை பாராட்டி, கைதட்டுவது எனக்கு நெகிழ்ச்சியாக உள்ளது.

ஜீ தமிழ் டிவியில் பங்கேற்ற நிகழ்ச்சியின் முடிவாக, 2வது பரிசு அறிவித்து, எனக்கு ரூ.5 லட்சமும், 5 சென்ட் நிலமும் தருவதாக சொன்னாங்க. அதில், ஒரு லட்ச ரூபாயை ஒரு சத்துமாவு கம்பெனி தரும்னு சொன்னாங்க. ஆனா, அவங்க, ஃபிளைட் டிக்கெட்டா தரோம்னு சொல்ல, நான் வேண்டாம்னு மறுத்துட்டேன்.

மிச்ச ரூ.4 லட்சத்தில், வரி எல்லாம் பிடிச்சது போக, ரூ.2.80 லட்சம் கிடைச்சது. அதை எல்லாம் என் மகன்களுக்கு பிரிச்சி கொடுத்துட்டேன். எனக்கு ஒரு ரூபாய் கூட மிஞ்சல. ஆனா, அந்த நிலம் மட்டும் இன்னும் கிடைச்சபாடில்லை. திண்டிவனம் அருகே, விவசாய நிலமா தரேன்னு சொன்னாங்க. இந்த வயசுல நான் விவசாயம் எப்படி செய்ய முடியும்.

அந்த நிலத்தின் மதிப்பில் பாதி அளவுக்கு பணமா கொடுத்தாக்கூட போதும். இதுபற்றி சொல்லியும், பரிசு அறிவித்தவர்கள் கண்டுக்கவே இல்லை ,'' என்று குறிப்பிட்டுள்ளார். எனினும், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள சரிகமப நிகழ்ச்சி இயக்குனர் விஜயகுமார், எங்கள் நிகழ்ச்சிக்கு டைட்டில் ஸ்பான்சராக இருந்த நிறுவனம்தான், இதற்கு பொறுப்பு. அவர்கள் கண்டிப்பாக, ரமணியம்மாளின் கோரிக்கையை நிறைவேற்றுவார்கள், என்று தெரிவித்தார்.