கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் "தன் மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு" மனு ஒன்றை அளித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
நான் தலித் என்பதால் கர்ப்பவதியான என் மனைவியின் கருவை கலைத்துவிட்டனர்! அதிர வைக்கும் இளைஞரின் புகார்!

தான் ஒரு தலித் இளைஞர் என்பதால் 2 மாத கருவை தனது மனைவியின் வயிற்றில் இருந்து வலுக்கட்டாயமாக அவர்களின் குடும்பத்தார் கலைத்து விட்டதாகவும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சம்பந்தம் இவர் அப்பகுதியில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
இவரது மகள் சாருலதா இவர் அதே பகுதியைச் சேர்ந்த விஜய் என்பவரை 5 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இவர்களின் காதலை பெண் வீட்டார் ஏற்றுக்கொள்ள மறுத்து உள்ளனர். சாருலதா வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் மற்றும் விஜய் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் சாருலதா வீட்டில் இவர்களது திருமணத்தை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டனர்.
இந்நிலையில் இருவரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்கள் திருமணம் செய்ததில் சாருலதாவின் அண்ணனுக்கு பிடிக்கவில்லை இதையடுத்து சாருலதாவை 3 மாதத்துக்கு முன்னதாக பெற்றோர் வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டனர்.
அப்போது இரண்டு மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார் சாருலதா. இந்த விஷயம் அவர்களது வீட்டிற்கு தெரியவர வலுக்கட்டாயமாக சாருலதாவிற்கு கருக்கலைப்பு செய்து விட்டதாகவும் கடந்த மூன்று மாதங்களாக மனைவியை தன்னிடமிருந்து பிரித்து வைத்துவிட்டதாகவும், மனைவியை என்னிடம் சேர்த்து வைக்க வேண்டும் எனவும் விஜய் கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார்.
இதையடுத்து மனுவின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.