ஈஷாவில் களைகட்டிய இளைஞர் தின கொண்டாட்டம்! உடலினை உறுதி செய்த இளசுகள்!

தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு ஈஷா சார்பில் நடந்த விளையாட்டு போட்டிகள் ஏராளமான கிராமப்புற இளைஞர்கள் பங்கேற்பு.


கோவை தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு ஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கம் சார்பில் கபாடி மற்றும் எறிபந்து போட்டிகள் ஆதியோகி முன்பு இன்று (ஜனவரி 12) நடைபெற்றன. 

இதில் செம்மேடு, இருட்டுப்பள்ளம், மத்வராயபுரம், பேரூர், நரசீபுரம், புள்ளப்பக்கவுண்டன் புதூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பங்கேற்றனர். குறிப்பாக, சீங்கபதி, பெருமாள் கோவில்பதி, முள்ளாங்காடு போன்ற பழங்குடியின கிராமங்களில் இருந்து ஏராளமான பெண்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

ஆண்களுக்கான கபாடி போட்டியில் 22 அணிகளும், பெண்களுக்கான எறிபந்து போட்டியில் 6 அணிகளும் பங்கேற்றனர். எல்லை பாதுகாப்பு படையின் துணை கமான்டெண்ட் திரு. கமலேஷ் குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். காலை 9 மணிக்கு தொடங்கிய போட்டிகள் மாலை 5.30 மணி வரை விறுவிறுப்பாக நடந்தது.


எறிபந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் புள்ளகவுண்டன் புதூர் அணி, முள்ளாங்காடு அணியை 15-3, 15-4 என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. அதேபோல், கபாடி போட்டியின் இறுதி ஆட்டத்தில் பரமேஸ்வரன்பாளையம் புளூ ஸ்டார் அணியும், நரசீபுரம் வீரகாளையும் அணியும் மோதின. ஆக்ரோஷமாகவும் விறுவிறுப்பாகவும் நடந்த இப்போட்டியில் 27-க்கு 13 என்ற புள்ளிக்கணக்கில் பரமேஸ்வரன்பாளையம் அணி வெற்றி பெற்றது.

இக்கரை போளுவாம்பட்டி பஞ்சாயத்து தலைவர் திரு. சதானந்தம் அவர்கள் வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றி கோப்பை மற்றும் ரொக்க பரிசுகளை வழங்கி வாழ்த்து கூறினார்.


கிராமப்புறங்களில் இருந்து திறமையான வீரர்களை உருவாக்கவும், அவர்களின் உடல் மற்றும் மன நலனை மேம்படுத்துவதும் இதுபோன்ற விளையாட்டு போட்டிகளை ஈஷா பல ஆண்டுகளாக நடத்தி வருகிறது. 2018-ம் ஆண்டு ஈரோட்டில் மாநில அளவில் கிராமோத்ஸவ விளையாட்டு திருவிழாவில் தமிழகம் முழுவதும் இருந்து 3,500 அணிகள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

ஊடக தொடர்புக்கு: 90435 97080, 63831 25184.