கடலூர் மாவட்டம் வடலூர் அருகே செவிலியர் தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இளம் நர்ஸ் துடிக்க துடிக்க தற்கொலை! தூண்டிய கணவன்! வடலூர் பரபரப்பு!

கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள கிராமத்தின் பெயர் குண்டிய மல்லூர். பசுமை நிறைந்த இந்த அழகிய கிராமத்தில் ராகுல் ராஜன்- செந்தமிழ் செல்வி வாழ்ந்து வந்தனர். கணவர் ராகுல் ராஜன் வேலைக்கு எதுவும் செல்லாமல் வெட்டிப் பேச்சு பேசி ஊரைச் சுற்றி வந்துள்ளார்.
ராகுல் ராஜனின் மனைவி செந்தமிழ் செல்விதான் வறுமை சூழ்நிலையை கருத்தில் கொண்டு குடும்ப பாரத்தை ஏற்றுக் கொண்டு குண்டிய மல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் வழக்கம் போல் எல்லாருடைய குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனை போல குடும்ப நிர்வாகத்தை யார் கவனிப்பது என்ற போட்டாப் போட்டி கணவன் மனைவி இடையே ஏற்பட்டுள்ளது.
இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது. மேலும் மாத சம்பளத்தை தன் அம்மாவிடம் தரவேண்டும் என்றும் இல்லை என்றால் வீட்டை விட்டு சென்று விடுமாறும் ராகுல் ராஜன் செந்தமிழ் செல்வியிடம் வற்புறுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் செந்தமிழ் செல்வியிடம் சம்பள பணத்தை தருமாறு ராகுல் ராஜன் கேட்டுள்ளார். அப்போது செந்தமிழ் செல்வி பணம் தர மறுக்க மனைவியை கடுமையான வார்த்தைகளால் பேசி உள்ளார் ராகுல் ராஜன்.
குடும்ப சூழ்நிலயை கருத்தில் கொண்டு வேலைக்கு செல்லாமல் வெட்டியாக இருக்கும் கணவன் தன்னை இப்படி பேசுகிறாரே என மனமுடைந்த செந்தமிழ் செல்வி உடனடியாக தன்னுடைய அறைக்கு சென்று மின்விசிறியில் சேலையை கட்டி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அவரது கணவர் ராகுல் ராஜன், மாமியார் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த குறிஞ்சிப்பாடி காவல் ஆய்வாளர் ஷியாம் சுந்தர் தலைமையிலான போலீசார் செந்தமிழ் செல்வியின் உடலை கைப்பற்றி உடற் கூறு ஆய்வுக்கு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மகள் சாவுக்கு மருமகனே காரணம் என செந்தமிழ் செல்வியின் தாய் செண்பகவள்ளி அளித்த புகாரில், மனைவி செந்தமிழ் செல்வியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து கணவர் ராகுல்ராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் ராகுல்ராஜனின் தாயிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர் போலீஸார்.