உடல் முழுக்க பிளாஸ்டிக் குப்பைகள்! 100கிமீ நடையாய் நடக்கும் இளைஞர்! நெகிழ வைக்கும் காரணம்!

திருவனந்தபுரம்: உடல் முழுக்க பிளாஸ்டிக் குப்பைகளை சுமந்தபடி 100 கி.மீ நடந்துசென்று ஒருவர் கவனம் ஈர்த்துள்ளார்.


கேரள மாநிலம், பாலக்காட்டை சேர்ந்தவர் தீபக் வர்மா. இவர், சுற்றுச்சூழல் விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில், குப்பைகளை சாலையோரம் வீசி செல்வதை தடுக்கும் வகையில், விநோத பிரசாரம் ஒன்றை செய்ய தீர்மானித்தார். இதன்படி சாலையோரம் சிதறி கிடக்கும் சிப்ஸ் பாக்கெட் கவர், ஷாம்பூ பாட்டில்கள், பிளாஸ்டிக் குப்பைகள் உள்ளிட்டவற்றை உடல் முழுக்க கயிறால் கட்டி, போர்வை போல மூடிக் கொண்டார்.  

பார்ப்பதற்கு நடமாடும் குப்பைத் தொட்டி போல தோன்றிய தீபக் இதே கெட்டப்பில், அக்டோபர் 1ம் தேதி காலை 8 மணிக்கு பாலக்காடு விக்டோரியா காலேஜில் இருந்து தனது விழிப்புணர்வு பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து, 24 மணிநேரம் கால்நடையாகவே சென்று, அக்டோபர் 2 காலை எர்ணாகுளம் தர்பார் ஹால் மைதானத்தை அடைந்தார்.

பொது இடத்தில் பிளாஸ்டிக் குப்பைகளை வீசி செல்வதை கண்டித்து, இத்தகைய விழிப்புணர்வு பயணம் நடத்தியதாக, தீபக் வர்மா ஊடகத்தினரிடம் தெரிவித்தார். நமக்கென்ன என்ற கோணத்தில் எல்லோரும் செல்லும் சூழலில் உடல் முழுக்க குப்பைகளை ஏந்தி விழிப்புணர்வு பயணம் செய்த தீபக், பலராலும் பாராட்டப்படும் நபராக மாறியுள்ளார்.