புதுமண தம்பதியருக்கு ஒரு வாளி குடிநீர்! தண்ணீர் பஞ்சத்தால் நண்பர்கள் கொடுத்த புதுவித அன்பளிப்பு! வைரல் புகைப்படம்!

திருச்சி: முற்றிலும் புது முயற்சியாக புதுமண தம்பதியருக்கு குடிநீர் பரிசளித்து, இளைஞர் ஒருவர் கவனம் ஈர்த்துள்ளார்.


தமிழகம் முழுக்க தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. தண்ணீர் தட்டுப்பாடு பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், புதிய பயணம் என்ற இணையதள என்ஜீஓ அமைப்பு வித்தியாசமான முறையில் திட்டமிட்டது. இதன்படி, இந்த அமைப்பைச் சேர்ந்த ஒருவரின் நண்பருக்கு திங்களன்று திருமணம் நடைபெற்றது. 

அப்போது, திருமணப் பெண் மற்றும் மாப்பிள்ளையின் கையில் ஆளுக்கு ஒரு பக்கெட் தண்ணீர் அளித்து, அந்த என்ஜீஓ அமைப்பினர், இதுதான் திருமண பரிசு என்று கூறினர். இது அங்கிருந்தவர்களை சிரிக்க வைத்தாலும், தண்ணீர் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக அமைந்தது. 

இதுபற்றி தண்ணீர் பரிசளித்த இளைஞர்களில் ஒருவரான ராகவன் சிவராமன் என்பவர் கூறுகையில், திருமணத்திற்கு வந்திருந்த ஏராளமான மக்களை ஈரக்கும் வகையிலும், தண்ணீர் சேமிப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இப்படி தண்ணீர் பரிசளிக்க நேரிட்டதாக, தெரிவித்தார்.