மேட்ரிமோனியல் வெப்சைட்டில் புகைப்படம்! போன் நம்பர்! வரன் தேடிய இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீத அனுபவம்!

ஆந்திராவில் திருமண இணையதளம் மூலம் அறிமுகமான நபர் பெண் ஒருவரின் பணத்தை நூதன முறையில் திருடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.


குர்னூல் மாவட்டம் நந்தியால் எனும் இடத்தை சேர்ந்த ஹாசிமா என்பவர் சமீபத்தில் கல்லூரி படிப்பை முடித்து விட்டு விடுதியில் தங்கி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்து தனியார் திருமண இணையதளம் ஒன்றில் தன்னுடைய விவரங்களை பதிவேற்றி உள்ளார். அதை பார்த்து அணுகிய நபர் ஒருவர் தன்னுடைய பெயர் ஹசீம் வசீர் என்றும், தான் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மருத்துவராக பணிபுரிவதாகவும் கூறியுள்ளார். மேலும் ஹாசிமாவை மணந்து கொள்ள விருப்பம் உள்ளதாகவும் தெரிவித்தார். 

இதையடுத்து ஹாசிமாவை நேரில் பார்க்க வேண்டும் என டெல்லி வரவழைத்துள்ளார் அசீம் வசீர். அவர் கூறியதை நம்பிச் சென்ற பெண் நீண்ட நேரம் காத்திருந்தும் அவர் வராததால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்.

சிறிது நாட்களுக்கு பின்னர் ஹாசீமாவை தொடர்பு கொண்ட அசீம் வசீர் எனக் கூறப்படும் அந்த நபர் தன்னுடைய பணம் 6 லட்சத்துடன் போலீசிடம் சிக்கிக்க கொண்டதாகவும், 75,000 ரூபாய் தந்தால் கொடுத்துவிட்டு வெளியில் வந்துவிடுவேன் என்றும் ஹாசிமாவிடம் கூறியுள்ளார் அந்த நபர்.

அவரது பேச்சை நம்பிய ஹாசீமா தன்னுடைய திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த 75,000 ரூபாயை அசீம் வசீர் கூறிய வங்கிக் கணக்கில் அனுப்பி வைத்துள்ளார்.

பின்னர் அந்த நபரின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. அதற்கு பின்னர்தான் தான் ஏமாற்றப்பட்டதை ஹாசீமா உணர்ந்து போலீசிடம் புகார் அளித்துள்ளார்.