எடப்பாடி பழனிசாமியிடம் அம்மாவின் தாய்மையை பார்க்கிறோம். பாராட்டும் இளம் வழக்கறிஞர்கள்

கொரோனா காலத்தில் ஒவ்வொரு தொழிலாளர்களும் எப்படியெல்லாம் துன்பப்படுகிறார்கள் என்பதை அறிந்து, அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்துவருகிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அந்த வகையில் தங்களுக்குக் கிடைத்த உதவிக்காக இளம் வழக்கறிஞர்கள் முதல்வருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.


இளநிலை சட்டப்படிப்பை முடிக்கும் மாணவர்கள் முழுநேர வழக்கறிஞர்கள் ஆக வேண்டும் என்றால் குறைந்தது 3 ஆண்டுகாலம் தேவைப்படுகிறது. இந்த சமயத்தில் போதிய வருமானம் இன்றி இளம் வழக்கறிஞர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர். ஒருசிலர் விட்டால் போதுமென வேறு துறையை தேர்வு செய்கின்றனர்.

இளம் வழக்கறிஞர்களின் இத்தகைய சிரமங்களை கருத்தில்கொண்டு கடந்த ஜூலை 2ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், “சட்டப்படிப்பை முடித்து கல்லூரியிலிருந்து வெளிவரும் இளம் வழக்கறிஞர்கள் வழக்கறிஞர்களாகப் பணியாற்றுவதற்குக் குறைந்தபட்சம் 3 அல்லது 4 ஆண்டுகள் தேவைப்படுகிறது. இதனால் கிராமப்புற மற்றும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வரும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே இளம் வழக்கறிஞர்களுக்கு 2 வருட காலத்திற்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன்’’ என தெரிவித்திருந்தார்.அரசின் இந்த உதவித் தொகையைப் பெறுவதற்கு பல்வேறு தகுதிகளும் நிர்ணயிக்கப்பட்டன.

அறிவிப்பு வெளியிட்டு மூன்று மாதங்கள் கூட முடியவில்லை. அதற்குள் செயலாக்கத்திற்கு வந்துவிட்டது முதல்வரின் அந்த முத்தான அறிவிப்பு. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இளம் வழக்கறிஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தை முதல்வர் எடப்பாடி தொடங்கிவைத்தார். இளம் வழக்கறிஞர்கள் பலரும் அவரிடம் உதவித்தொகையை பெற்றுக்கொண்டனர். மற்ற மாவட்டங்களுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.

ஒரு தாயைப் போன்று எங்கள் குறையை அறிந்து உதவி செய்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்று இளம் வழக்கறிஞர்கள் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துவருகின்றனர். இதுதான் அம்மாவின் அரசு என்று ஆனந்தப்படுகின்றனர்.