80 நாடுகளில் இருந்து வந்து சென்னையில் குவிந்த யோகா பிரியர்கள்! சத்குரு தலைமையில் சங்கமம்!

சென்னையில் சத்குருவின் ஈஷா யோகா வகுப்பு 80 நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.


சென்னையில் சத்குரு ஆங்கிலத்தில் நடத்திய ஈஷா யோகா வகுப்பில் வங்கதேசம், சிரியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத் உட்பட 80 நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். மீனம்பாக்கத்தில் உள்ள ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் ஈஷா யோகா வகுப்பு ஆங்கிலத்தில் டிசம்பர் 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

சென்னையில் 6 ஆண்டுகளுக்கு சத்குருவே நேரடியாக இவ்வகுப்பை நடத்தினார். இதில் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு  மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். குறிப்பாக, வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், செர்பியா, சிரியா,  வெனிசுலா, உக்ரைன், பெரு, மியான்மர், லெபனான், குவைத், இஸ்ரேல், இந்தோனேஷியா, சீனா, பிரேசில், ஆஸ்திரிலேயா, அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம் உட்பட 80 நாடுகளைச் சேர்ந்தோர் சத்குருவிடம் இருந்து நேரடியாக யோகா கற்பதற்காக சென்னை வந்தனர்.

அவர்களுக்கு சத்குரு அவர்கள் ‘ஷாம்பவி மஹாமுத்ரா’ என்ற சக்திவாய்ந்த தியானப் பயிற்சிக்கு இன்று (டிசம்பர் 22) தீட்சை வழங்கினார். முன்னதாக, டிசம்பர் 18, 19 ஆகிய தேதிகளில் நடந்த தமிழ் வகுப்பிலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

அப்போது, தமிழக காவல்துறையின் வேண்டுகோளின்படி, பெண்கள் பாதுகாப்புக்காக அவர்கள் உருவாக்கிய ‘காவலன்’ செயலியை பயன்படுத்துவது குறித்த வீடியோ ஒளிப்பரப்பப்பட்டது. பின்னர், இது தொடர்பாக சத்குரு அவர்கள் பேசியதாவது:

பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் குற்றங்களை தடுக்க பல்வேறு நிலைகளில் நாம் வேலை செய்ய வேண்டியுள்ளது. அதில் ஒரு பகுதியாக தமிழக காவல்துறை காவலன் என்ற செயலியை உருவாக்கியுள்ளது. இது பெண்களுக்கு பிரச்சனை வரும் நேரத்தில் அவர்களுக்கு உதவிடும் வகையில் உள்ளது. ஆனால் பெண்களுக்கு பிரச்சனையே வராமல் இருக்க நாம் செயல் செய்ய வேண்டும்.

பெண்களுக்கு எதிரான இது போன்ற அசிங்கமான செயல்கள் நம் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. நம் நாட்டை விட வெளி நாடுகளில் இதன் சதவிகிதம் அதிகமாக உள்ளது. குறிப்பாக, பாலியல் ரீதியான குற்றங்கள் அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகளில் மிக அதிகளவில் நடைபெறுகின்றன. மனிதர்கள் என்று சொல்லிக்கொள்ள முடியாத அளவுக்கு கீழ்நிலையில் சிலர் நடந்துகொள்கிறார்கள். பெண்களை சக உயிராக பார்க்க கூடிய நிலை கூட இல்லாமல் இருக்கின்றது.

இதற்கு மனிதனின் ஆக்கிரமிப்பு மனநிலை ஒரு முக்கிய காரணம். தனக்கு

தேவையானதை ஒரு நியாயமான, முறையான வழியில் பெறாமல், தேவை ஏற்படும் போதெல்லாம் ஆக்கிரமித்து அடைந்துவிடும் பழக்கம் இருக்கிறது. மனிதர்கள் மனம் மற்றும் உடல் கட்டாயங்களை கடந்து வாழ அவர்களுக்கு தேவையான கருவி இல்லையென்றால் இது போன்ற அசிங்கங்களை தடுக்க முடியாது.

மனித கட்டாயங்கள் என்று சொல்லும் போது அது பசியாக இருக்கலாம், காமமாக இருக்கலாம், வேறு எதுவாக இருந்தாலும் அந்த கட்டாயத்தில் அவர்கள் சிக்குண்டு இருக்கிறார்கள். அவர்களால் அதைத் தாண்டி சிந்திக்க முடியவில்லை. இதற்கு சிறுவயது முதலே இந்த மனித மனம் மற்றும் உடல் கட்டாயங்களை தாண்டி வாழ்வை பார்க்க அவர்களுக்கு தேவையான கருவிகள் கொடுக்கப்பட வேண்டும். அந்தவகையில் யோகா மிகச்சிறந்த கருவியாக செயல்படும்.

ஒரு அன்பான, ஆனந்தமான, அமைதியான சமூகம் தேவையென்றால் ஐம்புலன்களை தாண்டி உள்நோக்கி பார்க்கும் யோக கருவிகள் அனைத்து மக்களுக்கும் சென்று சேர வேண்டும். பெண்களை சக உயிராக பார்த்து மதிப்பளிக்கும் சமூகம் உருவாக மாற்றம் நம் ஒவ்வொருவரிடமிருந்து தொடங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.