யெஸ் வங்கி இயக்குனரின் மகள் லண்டன் செல்ல முயற்சி: தடுத்து நிறுத்திய போலீசார்
லண்டனுக்கு தப்பி ஓட முயற்சி! யெஸ் வங்கி இயக்குனரின் மகள் விமான நிலையத்தில் சிக்கினார்! அடுத்தடுத்து அரங்கேறும் அதிரடி திருப்பங்கள்!
மும்பை: லண்டன் தப்பிச் செல்ல முயன்ற யெஸ் வங்கி இயக்குனரின் மகள் ரோஷ்னி மும்பை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். யெஸ் வங்கி விவகாரம் பெரும் பூதாகரமாக மாறியுள்ளது. இந்நிலையில், அந்த வங்கியின் நிறுவனர் மற்றும் இயக்குனர் ராணா கபூர் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி பல ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இதற்கிடையே ராணா கபூரின் மகள் லண்டனுக்கு தப்பிச் செல்ல முயற்சிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக, கபூரின் மகள் ரோஷ்னி கபூரை மும்பை விமான நிலையத்தில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
ஏற்கனவே ராணா கபூரின் மனைவி பிந்து கபூர், மகள்கள் ராக்கி, ராதா மற்றும் ரோஷ்னியை தேடப்படும் நபர்களாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் ரோஷ்னி கபூர் தப்பிச் செல்ல முயன்றபோது பிடிபட்டதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது. அதிகளவு கடன்களை வழங்கியதால் தனியார் துறையை சேர்ந்த யெஸ் வங்கி வாராக்கடன் சுமையில் சிக்கியுள்ளது.
இதனை சமாளிக்கும் வகையில், அந்த வங்கியின் மொத்த நிர்வாகத்தையும் ரிவர்வ் வங்கி கையகப்படுத்தியுள்ளது. இதுதவிர வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.