அந்த ஒன்பதும் எங்களுக்குத்தான். தி.மு.க.வை மிரட்டிய எடப்பாடி பழனிசாமி!

உள்ளாட்சித் தேர்தலில் நாங்கள்தான் வெற்றி அடைந்திருக்கிறோம் என்று சொல்லிவரும் தி.மு.க.வுக்கு விபரீதமான புள்ளிவிபரங்களைக் காட்டி வெற்றி அ.தி.மு.க.வுக்குத்தான் என்று சொல்லியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.


இந்த உள்ளாட்சித் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எவ்வளவு வாக்குகளைப் பெற்றிருக்கிறது என்ற புள்ளிவிவரத்தைத் தான் நான் சொல்லியிருக்கிறேன். அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலை ஒப்பிட்டுத்தான் அதைப் பேசியிருக்கிறேன், சட்டமன்றத் தேர்தல் இல்லை. அண்மையில் தான் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது.

அந்த நாடாளுமன்றத் தேர்தலிலே, அதிகமான வாக்குகளை உங்களுடைய கூட்டணி பெற்று, அதிகமான வேட்பாளர்கள் வெற்றி பெற்றார்கள். ஆனால் அது இப்போது தலைகீழாக மாறி விட்டது. அண்மையிலே நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலே இவ்வளவு வாக்குகள் தான் பெற்றிருக்கிறீர்கள், இவ்வளவு உறுப்பினர்களைத் தான் பெற்றிருக்கிறீர்கள் என்ற விவரத்தைத்தான் நேற்றையதினம் நான் குறிப்பிட்டேன். 

மாண்புமிகு சட்டப்பேரவை துணைத் தலைவர் அவர்களே, அப்படித்தான் கனவு கண்டு கொண்டிருந்தீர்கள், நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. நாடாளுமன்றத் தேர்தலிலே போட்ட கணக்குப்படி உங்கள் கணக்கு சரியாக இருக்கும் என்று நினைத்தீர்கள். ஆனால் உள்ளாட்சிமன்றத் தேர்தலிலே மக்கள் தலைகீழாக மாற்றிவிட்டார்கள்.

ஆகவே, நாடாளுமன்றத் தேர்தலிலே கிராமப்புறங்களிலே எவ்வளவு வாக்குகள் வாங்கியிருக்கிறீர்கள் என்று அத்தனை பேருக்கும் தெரியும். ஆனால் இப்பொழுது உள்ளாட்சி மன்றத் தேர்தலில் உங்களுடைய நிலை என்ன? தலைகீழாக மாற்றப்பட்டுவிட்டது. இன்னும் 9 மாவட்டங்கள் இருக்கிறது. அந்த 9 மாவட்டங்களிலும் அதிக அளவிலே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர்கள் அதிக அளவு வெற்றி பெறுவார்கள், அதுவும் மாறத்தான் போகிறது. ஏனென்றால், நீங்கள் நாடாளுமன்றத் தேர்தலிலே சொல்லிக் கொண்டு இருந்தீர்கள். 

22 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலிலே, நாங்கள் அதிக இடங்களை பெற்றுவிடுவோம் என்று சொல்லிக் கொண்டிருந்தீர்கள். ஆனால், அதற்குப் பிறகு, இடைத்தேர்தல் வந்தது. இரண்டும் உங்கள் கையிலே தான் இருந்தது. ஒன்று திமுக வசம் இருந்தது விக்கிரவாண்டி, மற்றொன்று, நாங்குநேரி காங்கிரஸ் வசம் இருந்தது. எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் நாங்கள் வெற்றி பெற்றோம் என்பதை நாட்டு மக்கள் எங்களுக்கு அங்கீகாரத்தை கொடுத்திருக்கின்றார்கள்.  

 அதேபோலத்தான், நாடாளுமன்றத் தேர்தலிலே, கிராமப்புறத்திலே நீங்கள் அதிகமான வாக்குகளை பெற்றீர்கள். அதை வைத்து ஒவ்வொரு வேட்பாளரும் நாங்கள் லட்சக்கணக்கான வாக்குகளை பெற்றோம் என்று சொன்னீர்கள். அண்மையில், வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. அதற்கு முன்பு ஒரு எதிர்க்கட்சித் தலைவர் சொன்னார்.

ஏற்கனவே நாங்கள் திண்டுக்கல்லிலே அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். அதைவிட கூடுதலான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று சொன்னார்கள். என்ன ஆகியது? வேலூர் தொகுதியில் வெறும் 0.70 சதவிகிதம் தான் வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றீர்கள். வெறும் 8000 வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றீர்கள். ஆக, நீங்கள் பெற்ற வெற்றியை நான் மறுக்கவில்லை.

நீங்கள் சொல்கிறீர்களே அதற்கு தான் நான் பதில் சொல்லி கொண்டு இருக்கின்றேன். மரியாதைக்குரிய காங்கிரஸ் கட்சித் தலைவர் சொன்ன கருத்துக்கு நான் பதில் சொல்கின்றேன். அப்பொழுது நடைபெற்ற தேர்தல் நாடாளுமன்றத் தேர்தல். அந்த நாடாளுமன்றத் தேர்தலிலே அதிக வாக்குகளைப் பெற்றோம், அதனால் அதிக இடங்களைப் பெற்றோம் என்று சொன்னீர்கள். இப்பொழுது நிலைமை மாறிவிட்டது என்கிறார் எடப்பாடி. என்ன சொல்லப் போகிறார் ஸ்டாலின்?