அந்த ஆளு பூமிக்கே பாரம்! ப.சிதம்பரத்தை பங்கம் செய்த எடப்பாடியார்!

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பூமிக்கே பாரம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.


காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக சென்னையில் நேற்று காங்கிரஸ் கருத்தரங்கம் நடத்தியது. இதில் கலந்து கொண்டு ப.சிதம்பரம் பேசியது பரபரப்பானது. அதிலும் மத்திய அரசின் முடிவை அதிமுக ஆதரித்தது குறித்து கடுமையாக தாக்கி பேசினார் ப.சிதம்பரம்.

காஷ்மீரை பிரித்தது போல் தமிழகத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பாஜக அரசு பிரித்தாலும் கூட அதற்கு அதிமுக சம்மதம் தெரிவிக்கும் என்று ப.சிதம்பரம் நேற்று பேசினார். இது குறித்து மேட்டூரில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: ப.சிதம்பரம் எல்லாம் ஒரு ஆளா? அவரால் பூமிக்கு தான் பாரம். பல வருடங்களாக மத்திய அமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம்.

ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்ததால் தமிழகத்திற்கு ஏதாவது நன்மை கிடைத்துள்ளதா? இல்லை ப.சிதம்பரம் தமிழகத்திற்கு என்று ஏதாவது திட்டத்தை கொண்டு வந்தாரா? காவேரி பிரச்சனையை தீர்க்க முயன்றாரா? முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக இருந்தாரா?

ப.சிதம்பரம் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு தலைவர். மத்திய அமைச்சராக இருந்த போது தமிழகத்தை எட்டி கூட பார்க்காதாவர். அவர் பேசுவதை எல்லாம் எப்படி பெரிதாக எடுத்துக் கொள்வது என்று கூறி கலாய்த்துவிட்டு முதலமைச்சர் புறப்பட்டார்.