கோயில்களில் யாகம்! மழைக்காகவா அல்லது எடப்பாடி வெற்றிக்கா?

தமிழகத்தில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் மழைக்காக யாகம் செய்யுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், இந்த யாகம் உண்மையில் மழைக்காகவா அல்லது எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி தொடர்ந்து இருக்கவேண்டும் என்ற கோரிக்கைக்காகவா என்று கேள்வி எழுந்துள்ளது.


தமிழகத்தில் பருவமழை பெய்வதற்காக முக்கிய கோயில்களில் யாகம் நடத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு இந்துசமய அறநிலையத் துறை ஆணையர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.  அதன்படி, முக்கிய கோவில்களில், பழக்க வழக்கத்துக்கு உட்பட்டு அனைத்து சார்நிலை அலுவலர்கள் யாகம் நடத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். பர்ஜன்ய சாந்தி வருண ஜபம் வேள்வி செய்து சிறப்பு அபிஷேகம் செய்தல் நந்தி பெருமானுக்கு நீர்த்தொட்டி கட்டி நந்தியின் கழுத்து வரை நீர் நிரப்பி வழிபாடு செய்தல் வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஓதுவார்களை கொண்டு சுந்தரமூர்த்தி நாயனார் இயற்றிய ஏழாம் திருமறை ஓதுதல்

திருஞானசம்பந்தர் இயற்றிய 12-ஆம் திருமுறையில் தேவார மழைப்பதிகத்தை மேகரா குறிஞ்சி என்ற பண்ணில் பாடி வேண்டுதல் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாதஸ்வரம், வயலின், புல்லாங்குழல், வீணை வாத்தியங்களுடன் அமிர்தவர்ஷினி, மேகவர்ஷினி, கேதாரி ஆனந்த பைரவி, ரூப கல்யாணி போன்ற ராகங்களை கொண்டு வாசித்து வழிபாடு செய்தல், சிவன் கோவில்களில் சிவபெருமானுக்கு சீதள கும்பம் எனப்படும் தாராபாத்திர நீர் விழா செய்தல், சிவ பெருமானுக்கு ருத்ராபிஷேகம், மகா விஷ்ணுவுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்தல், ஸ்ரீ மாரியம்மனுக்கு பால், தயிர், இளநீர் முதலியவற்றால் அபிஷேகம் செய்தல், நாகை மாவட்டம் மயிலாடுதுறை வட்டம் திருப்புன்கூர் சிவன் கோவிலில் உள்ள மகா நந்திக்கு மகாபிஷேகம் செய்தல்

வருண சூக்த வேத மந்திர பாராயணம் செய்தல், வருண காயத்ரி மந்திர பாராயணம் செய்தல் என அந்த கோவில்களின் பழக்க வழக்கத்துக்கு உட்பட்டு சிறப்பாக நடத்திட அக்கறையுடன் செயல்பட வேண்டும் என க.பணீந்திர ரெட்டி அறிவுறுத்தியுள்ளார். அந்த நிகழ்வுகளில் சம்பந்தப்பட்ட இணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், செயல் அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இது, மழைக்கான யாகம் இல்லை, இது ஆட்சியை தக்கவைப்பதற்கான யாகம் என்று இப்போது சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். மழை காலத்தில் இப்படி யாகம் நடத்தாமல், தேர்தல் காலத்தில் நடத்துவது ஏன் என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.

அப்படியாப்பா..?